/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு திடுக்' பின்னணி என்ன
/
மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு திடுக்' பின்னணி என்ன
மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு திடுக்' பின்னணி என்ன
மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு திடுக்' பின்னணி என்ன
ADDED : ஜூலை 13, 2024 04:20 AM
மதுரை : மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் ஒரு பெண் உட்பட7 பேரை போலீசார்கைது செய்தனர்.கடத்தல் பின்னணியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின்மனைவி சம்பந்தப்பட்டிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகன் நேற்றுமுன்தினம் காலை ஆட்டோவில் பள்ளிக்கு சென்றபோது ஆம்னி வேனில் வந்த சிலர் வழிமறித்தனர்.
ஆட்டோவை அங்கேயே நிறுத்த செய்துவிட்டு மாணவனையும், ஆட்டோ டிரைவர் பால்பாண்டியையும் ஆம்னி வேனில் கடத்திச்சென்றனர்.
அவர்களில் ஒருவர் மைதிலிக்கு போன் செய்து 'மகன் உயிரோடு வேண்டுமானால் ரூ.2 கோடி தரவேண்டும்' என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசில் மைதிலி புகார் செய்தார். போலீசார் நெருங்குவதை அறிந்து மாணவனையும், பால்பாண்டியையும் செக்கானுாரணி அருகே கிண்ணிமங்கலம் பகுதியில் இறக்கிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பினர்.
இவ்வழக்கில் மதுரையைச் சேர்ந்த கிேஷார்,துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பெண் சூர்யா, துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில்குமார் உட்பட7பேரைஎஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர். செந்தில்குமார் போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். மாணவனிடம் அவரது குடும்ப வழக்கறிஞர்கள் அய்யப்பராஜா, முருக கணேஷ் விசாரித்தனர்.
துப்பாக்கியால் மிரட்டல்
போலீசார் கூறியதாவது:
கடன் பிரச்னையால் மாணவர் கடத்தப்பட்டார். மைதிலிக்கு பயத்தை ஏற்படுத்த ஆட்டோ டிரைவர் பால்பாண்டியை பட்டாகத்தி கைப்பிடியால் தாக்கி காயம் ஏற்படுத்தி அதை அலைபேசியில் காண்பித்து பேரம் பேசினர். மாணவன் சத்தம் போடாமல் இருக்க நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர்.
2 மணி நேரம் கழித்து கடத்தல்காரர்களுக்கு ஒரு போன் வந்தது. இதைதொடர்ந்து இருவரையும் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதைதொடர்ந்து அவ்வழியே வந்தவரின் அலைபேசியை வாங்கி தாய் மைதலிக்கு மாணவன் போன் செய்து, கிண்ணிமங்கலத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசிற்கு மைதிலி தகவல் தெரிவிக்க, கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் இருவரும் மீட்கப்பட்டனர்.
கடத்தப்பட்டது ஏன்
விளாத்திக்குளம் சூர்யா சில ஆண்டுகளுக்கு முன் மைதிலி, அவரது கணவர் ராஜ்குமாரிடம் வட்டிக்கு ரூ.2 கோடி கடன் வாங்கினார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் திருப்பி தராமல், கடனுக்கு ஈடாக மதுரையில் உள்ள சில சொத்துகளை மைதிலிக்கு சூர்யா எழுதிக் கொடுத்தார்.
பணமும், சொத்தும் இல்லாத நிலையில் மைதிலியின் மகனை கடத்தி ரூ.2 கோடி பறிக்க சூர்யா திட்டமிட்டார். இதற்காக துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில் உள்ளிட்ட கூலிப்படையினரை அணுகினார்.
திட்டமிட்டப்படி நேற்றுமுன்தினம் 4 பேர் ஆம்னி வேனில் மாணவனையும், ஆட்டோ டிரைவரையும் கடத்தினர். கூட்டாளிகள் இருவர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்தனர்.
போலீஸ் தேடுவதை அறிந்த சூர்யா, கூலிப்படையினருக்கு தகவல் தெரிவித்ததால் இருவரையும் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் சூர்யாவின் கணவர் குஜராத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உள்ளார். அவருக்கு தன் மனைவியின் நடவடிக்கைகள் குறித்து தெரியுமா எனத்தெரியவில்லை.
இவ்வாறு தெரிவித்தனர்.
இதற்கிடையே கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

