/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் 40 ஆண்டாக குடிநீருக்கு ஏங்கும் கிராம மக்கள்
/
நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் 40 ஆண்டாக குடிநீருக்கு ஏங்கும் கிராம மக்கள்
நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் 40 ஆண்டாக குடிநீருக்கு ஏங்கும் கிராம மக்கள்
நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் 40 ஆண்டாக குடிநீருக்கு ஏங்கும் கிராம மக்கள்
ADDED : மார் 03, 2024 08:07 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, 8வது வார்டிலுள்ள, தட்டக்கல், மொடக்கு பகுதியில், 42 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பேரூராட்சி நிர்வாகம் மூலம், குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் அதே பகுதியிலுள்ள அல்லிமுத்து என்பவரின் விவசாய கிணற்றில் இருந்து, குடிநீர் எடுத்து, அதை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அல்லிமுத்துவின் விவசாய கிணற்றிலும் போதியளவு தண்ணீர் இல்லாததால், அவர் விவசாயம் செய்ய முடியாமலும், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு, குடிநீர் வினியோகிக்க முடியாமலும் தவித்து வருகிறார். இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, நாகோஜனஹள்ளி பேரூராட்சி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த மீனா, 50, என்பவர் கூறுகையில், ''ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், 2 திராவிட கட்சிகளும் மாறி, மாறி உங்கள் தேவையான குடி தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி, ஓட்டுகளை பெற்று செல்கின்றனர். ஆனால் இதுநாள் வரை இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. தற்போதைய, தி.மு.க., அரசு இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு குடிநீர் வழங்க முன்வர வேண்டும்,'' என்றார்.

