/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகா சிவராத்திரி விழா: 1,100 மீ., உயர மலைக்கு நடந்து சென்ற பக்தர்கள்
/
மகா சிவராத்திரி விழா: 1,100 மீ., உயர மலைக்கு நடந்து சென்ற பக்தர்கள்
மகா சிவராத்திரி விழா: 1,100 மீ., உயர மலைக்கு நடந்து சென்ற பக்தர்கள்
மகா சிவராத்திரி விழா: 1,100 மீ., உயர மலைக்கு நடந்து சென்ற பக்தர்கள்
ADDED : மார் 09, 2024 12:56 AM
ஓசூர், மகா சிவராத்திரி விழாவையொட்டி, கடல் மட்டத்தில் இருந்து, 1,100 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்கு நடந்து சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள மலையில், சிவா நஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து, 1,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோவிலுக்கு செல்ல சிறிது துாரம் மட்டுமே படிக்கட்டுகள் உள்ளன. அதன் பின் செங்குத்தாக உள்ள பாறையின் மீது, இரும்பு குழாய்களை பிடித்து கொண்டு தான் ஏற வேண்டும். இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், கொளுத்தும் வெயிலிலும், நேற்று காலை முதல் மலை மீது ஏறி, சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர் மலைமீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூன்று மாநிலத்தில் இருந்து வந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் ராம்நகரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.

