/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓடும் லாரியில் தீ விபத்து அட்டை, பேப்பர் நாசம்
/
ஓடும் லாரியில் தீ விபத்து அட்டை, பேப்பர் நாசம்
ADDED : டிச 15, 2025 07:17 AM
ஓசூர்: துாத்துக்குடியிலிருந்து பழைய அட்டைகள், பேப்பர் ஏற்றிய லாரி, கர்நாடகா மாநிலம், தும்கூருக்கு நேற்று மதியம் சென்றது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பாறைகொட்டாயை சேர்ந்த முத்து, 34, என்பவர் லாரியை ஓட்டினார்.
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் சிப்காட் ஜங்ஷனை தாண்டி, அசோக் லேலண்ட் நிறுவனம் அருகே மதியம், 2:30 மணிக்கு சென்றபோது, திடீரென லாரியில் இருந்த அட்டைகள், பேப்பர்கள் தீப்பிடித்து எரிய துவங்கின. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், லாரி டிரைவர் முத்துவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர், சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி உயிர் தப்பினார். ஓசூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேப்பர், அட்டை லோடு முழுவதும் எரிந்து நாசமானது. சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

