/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை வசதி இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு
/
சாலை வசதி இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு
ADDED : ஏப் 17, 2024 12:33 PM
ஓசூர்: தளி அருகே, சாலை வசதி இல்லாததால், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த, இரு கிராம மக்கள், ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பஞ்., உட்பட்ட கொட்டபாலம் மற்றும் சூடசந்திரம் பஞ்.,ல் உள்ள பசவனபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்ல, 1.8 கி.மீ., துாரம் சாலை வசதி முறையாக இல்லை. இதனால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதனால், இக்கிராம மக்களுக்கு, பெண் கொடுக்கவே தயங்குகின்றனர் என, மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் மற்றும் தளி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கொட்டபாலம் மற்றும் பசவனபுரம் கிராம மக்கள், தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தனர்.
இக்கிராமங்களில், 500 ஓட்டுகள் வரை உள்ள நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலையும் புறக்கணிப்பதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, சாலை வசதி கேட்டு, தளி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பி.டி.ஓ., விமல்ரவிக்குமார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நபார்டு திட்டத்தில், 1.16 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் நிர்வாக அனுமதி கேட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்தவுடன், சாலை பணிகள் துவங்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.

