/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பலவீனமான அ.தி.மு.க., குறைந்த ஓட்டு கிடைத்த பகுதியில் தீவிரம் காட்டும் மாஜி
/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பலவீனமான அ.தி.மு.க., குறைந்த ஓட்டு கிடைத்த பகுதியில் தீவிரம் காட்டும் மாஜி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பலவீனமான அ.தி.மு.க., குறைந்த ஓட்டு கிடைத்த பகுதியில் தீவிரம் காட்டும் மாஜி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பலவீனமான அ.தி.மு.க., குறைந்த ஓட்டு கிடைத்த பகுதியில் தீவிரம் காட்டும் மாஜி
ADDED : ஏப் 11, 2024 12:06 PM
நமது நிருபர்
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பாலகிருஷ்ணாரெட்டி; ஓசூர் சட்டசபை தொகுதியில் கடந்த, 2016 ல் வெற்றி பெற்ற இவர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரானார். அதன் பின் அமைச்சரவை மாற்றத்தில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். அதனால் ஓசூர் சட்டசபைக்கு, 2019 ல் இடைத்தேர்தல் வந்தது. அதில் தனது மனைவி ஜோதிக்கு அ.தி.மு.க.,வில் சீட் வாங்கினார். ஜோதி தோல்வியடைந்தார்; 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஜோதி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி போட்டியிட இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், கட்சி பொது செயலாளர் இ.பி.எஸ்., தொகுதியில் பலவீனமான பகுதியை சுட்டிகாட்டி அதை சரி செய்ய உத்தரவிட்டார். அதே நேரம் ஜெயப்பிரகாஷிற்கு சீட் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, தன் மனைவிக்கு வரும், 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் சீட் வாங்கி கொடுத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நினைப்பில் தற்போது உள்ளார். அதனால், ஓசூர் சட்டசபை தொகுதியில், கிருஷ்ணகிரி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷிற்கு முன்னிலை பெற்று தர வேண்டும் என முடிவு செய்துள்ளார். ஏனெனில் கடந்த, 2019 இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில், ஓசூர் தொகுதியில் அவரது மனைவி தோல்வியடைந்தார்.
2019 லோக்சபா தேர்தலிலும், ஓசூர் தொகுதியில் காங்., வேட்பாளருக்கு, 10 ஆயிரத்து, 938 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்தன. வரும், 2025 சட்டசபை தேர்தலில் தனது மனைவிக்கு சீட் கிடைக்க வேண்டும் என்றால், ஓசூர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு முன்னிலை பெற்று காட்ட வேண்டிய கட்டாயம் மாஜி அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டிக்கு உள்ளது. அதனால், கடந்த கால தேர்தல்களில், அ.தி.மு.க.,விற்கு ஓட்டு வங்கி குறைந்த, பத்தலப்பள்ளி, காளேகுண்டா, ராம்நகர், மத்திகிரி போன்ற பகுதிகளில் பாலகிருஷ்ணாரெட்டி கவனம் செலுத்தியுள்ளார்.
அதேபோல், தளி, பர்கூர் தொகுதியும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், பர்கூர் தொகுதியில் அ.தி.மு.க.,வும், தளி தொகுதியில் கூட்டணியில் இருந்த பா.ஜ., வேட்பாளரும் தோல்வியடைந்தனர். அதாவது, ஓசூர், தளி, பர்கூர் என, மேற்கு மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட, 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. அதனால், அத்தொகுதிகளில் பலவீனமான ஏரியாக்களை கண்டறிந்தும் பணியாற்றி வருகிறார். இத்தொகுதிகளில் அ.தி.மு.க.,விற்கு கூடுதல் ஓட்டுகளை பெற்று கொடுத்து விட்டால், கட்சி தலைமையிடம் பேசி, வரும் சட்டசபை தேர்தலில் தன் மனைவிக்கு சீட் கேட்டு வாங்கி விடலாம் என, பாலகிருஷ்ணாரெட்டி கணக்கு போட்டுள்ளார்.

