/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிழற்கூடம் இல்லாத பஸ் ஸ்டாப்பால் அவதி
/
நிழற்கூடம் இல்லாத பஸ் ஸ்டாப்பால் அவதி
ADDED : ஏப் 08, 2024 07:32 AM
கரூர் : கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், முக்கிய பஸ் நிறுத்தங்களில் இரண்டு பக்கமும் நிழற்கூடம் இல்லாததால், பயணிகள் மழை, வெயிலில் நின்று அவதிக்குள்ளாகின்றனர்.கரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி, கொசுவலை துணி உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் ஜரூராக நடந்து வருகிறது.
இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் தினசரி கரூர் வந்து செல்கின்றனர். கரூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் புலியூர், மணவாசி, மாயனுார், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை, திம்மாச்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பஸ் மற்றும் ரயில் மூலம் கரூருக்கு வந்து செல்கின்றனர். கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில், பயணிகளுக்கு நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளதால் கடும் வெயில், மழையில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது, கோடைகாலம் என்பதால், பொது மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட கிராம பஞ்., டவுன் பஞ்., நிர்வாகங்கள் உடனடியாக இரண்டு பக்கமும் நிழற்கூடம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் - திருச்சி சாலையில் ஏதாவது, ஒரு பக்கம் மட்டுமே சில இடங்களில் பயணியர் நிழற்கூடம் உள்ளது. குறிப்பாக, கரூர் அடுத்த புலியூரில் நிழற்கூடம் வசதி இல்லாமல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஜவுளி தொழிலாளர்கள் என அனைவரும் அருகிலுள்ள பேக்கரி, டீக்கடை, பூ கடை என நிழல் இருக்கும் இடங்களில் தஞ்சமடைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

