/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறுவை சாகுபடி திட்டத்தை முன் கூட்டியே அறிவிக்கணும்
/
குறுவை சாகுபடி திட்டத்தை முன் கூட்டியே அறிவிக்கணும்
குறுவை சாகுபடி திட்டத்தை முன் கூட்டியே அறிவிக்கணும்
குறுவை சாகுபடி திட்டத்தை முன் கூட்டியே அறிவிக்கணும்
ADDED : ஏப் 01, 2024 04:01 AM
கரூர்: ''குறுவை சாகுபடி குறித்த திட்டத்தை, தமிழக அரசு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பாண்டியன் தெரிவித்தார்.
கேரளா, கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றின், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்தாண்டு தென் மேற்கு பருவ மழை பொய்த்து போனது. இதனால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு, நெல் உற்பத்தி குறைந்தது. இதனால், அரிசி விலை கணிசமாக உயர்ந்தது.
நடப்பாண்டு வரும் ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், அணையின் நீர்மட்டம், 60 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக, 25 கன அடிக்கும் குறைவாகவே உள்ளது. கோடை காலத்தையொட்டி, குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், வரும் ஜூன் மாதத்துக்குள் மேலும் குறையும் நிலை உள்ளது. இதனால், வரும் ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடியில், 13 லட்சத்து, 50,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்தாண்டு போதிய தண்ணீர் இல்லாததால், 10 லட்சம் ஏக்கரில் தான் சாகுபடி செய்யப்பட்டது. அதற்கும், உயிர் தண்ணீர் கிடைக்காத காரணத்தால், ஒரு ஏக்கரில் இரண்டு டன் நெல் உற்பத்திக்கு பதிலாக, ஒரு டன் நெல் உற்பத்தி தான் செய்ய முடிந்தது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்திலும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால், அரிசி கிலோ ஒன்றுக்கு, 20 முதல், 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தற்போதைய மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை வைத்து பார்க்கும் போது, குறுவை சாகுபடிக்கு வரும் ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமல்ல சம்பா சாகுபடி மேற்கொள்வது குறித்து, தமிழக அரசு முன் கூட்டியே, அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்து திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

