/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் நீர்கசிவு இல்லை உதவி செயற்பொறியாளர் விளக்கம்
/
மாயனுார் கதவணையில் நீர்கசிவு இல்லை உதவி செயற்பொறியாளர் விளக்கம்
மாயனுார் கதவணையில் நீர்கசிவு இல்லை உதவி செயற்பொறியாளர் விளக்கம்
மாயனுார் கதவணையில் நீர்கசிவு இல்லை உதவி செயற்பொறியாளர் விளக்கம்
ADDED : ஜூலை 24, 2024 10:13 PM
கரூர்:''கரூர் அடுத்த, மாயனுார் கதவணையில் நீர்கசிவு இல்லை,'' என, நீர்வளஆதார ஆற்று பாதுகாப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே, 1,233 மீட்டர் நீளத்திற்கு, 98 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட கதவணை, 2014 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 4.63 லட்சம் கனஅடி நீர் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. இந்த கதவணை காவிரி ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரை திசை திருப்பி, காவிரி, அக்கினியாறு, தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட முதன்மையான கதவணையாகும்.
கதவணையின் இடது மற்றும் வலது புறம் உள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டுவாய்க்கால், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால், தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம் கால்வாய் மற்றும் வடகரை வாய்க்கால் ஆகியவை மூலம், 1.72 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. கதவணையில், 1.05 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி வைப்பதால்,ஆற்றின் இருகரையோரம் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, பல மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது
கடந்த 2015, 2018, 2019ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அதிகபட்சமாக, 2.47 லட்சம் கன அடி தண்ணீர் கதவணை மூலம் வெளியேற்றப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக, கதவணையின் அடிதள கட்டுமானங்கள் சேதம் ஏற்பட்டு, நான்கு ஷட்டர்களில் நீர்கசிவு காணப்படுகிறது. சில பகுதிகளில் கதவணையின் கீழ்புறம் கான்கிரீட் தளம் சேதமடைந்துள்ளது. ஆகவே, கதவணையில் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், 2022 பிப்.,ல், 185.26 கோடி ரூபாய் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாயனுார் கவணையில் நீர் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சென்னையில் இருந்து தரக்கட்டுப்பாட்டு பிரிவு தலைமை செயலர் சுந்தர்ராஜன், திட்டம், உருவாக்கம் தலைமை பொறியாளர் ரமேஷ், அணைகள் பாதுகாப்பு பிரிவு தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், திட்டம் உருவாக்கம் பிரிவு துணை தலைமை பொறியாளர் மணிவாசகம் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, 406.50 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் மாவட்டம் அணிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணியை பார்வையிட்டனர். மேலும் மாயனுாரில் நடக்கும் காவிரி--வைகை--குண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, குளித்தலை நீர்வளஆதார அமைப்பின் ஆற்று பாதுகாப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணன் கூறுகையில், ''ஆண்டுதோறும் மாவட்டத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள உயர் அதிகாரிகள் வருவர். அதன்படி, கரூர் மாவட்டத்தில் புகளூர் கதவணை, காவிரி--வைகை--குண்டாறு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாயனுார் கதவணையையும் பார்வையிட்டனர். மாயனுார் கதவணையில் நீர் கசிவு போன்ற எந்த பாதிப்பு இல்லை,'' என்றார்.

