/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்கரை பாசன வாய்க்காலில் மீண்டும் தற்காலிக பாலம்
/
தென்கரை பாசன வாய்க்காலில் மீண்டும் தற்காலிக பாலம்
ADDED : ஆக 27, 2024 03:05 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரம் தென்கரை பாசன வாய்க்காலில் பெரிய பாலம் சேதம் ஏற்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி, 165 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது.
பொது மக்கள் நலன் கருதி, கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில், பாசன வாய்க்காலில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த மாதம் மேட்டூரில் அணையில் இருந்து நீர் அளவு அதிகளவு வந்ததால், காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்காலில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வந்ததால், தற்காலிக பாலம் முழுவதும் சேதம் ஏற்பட்டு, பொது மக்கள் பயன்படுத்திட முடியாத நிலை ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
பொது மக்கள் கோரிக்கையை ஏற்ற, நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் தற்காலிக பாலம் அமைத்தனர். இப்பணியை, கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகுமார் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் அசாருதீன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர். அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த மக்கள். புதிய பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

