/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கன்னியாகுமரி ரயிலில் ஒழுகும் 'ஏசி' பெட்டி ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பால் பயணியர் அவதி
/
கன்னியாகுமரி ரயிலில் ஒழுகும் 'ஏசி' பெட்டி ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பால் பயணியர் அவதி
கன்னியாகுமரி ரயிலில் ஒழுகும் 'ஏசி' பெட்டி ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பால் பயணியர் அவதி
கன்னியாகுமரி ரயிலில் ஒழுகும் 'ஏசி' பெட்டி ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பால் பயணியர் அவதி
ADDED : மே 25, 2024 02:29 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி விரைவு ரயிலில் 'ஏசி' பெட்டியில் மழை நீர் ஒழுகிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த ரயிலில் நிர்வாகம் செய்துள்ள மாற்றங்கள், பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் பெரும்பாலும் கன்னியாகுமரி விரைவு ரயிலை தான் விரும்புகின்றனர். மாலை 5:50க்கு கன்னியாகுமரியில் புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு சென்னை சென்றடையும்.
இந்த ரயிலில் சில நாட்களுக்கு முன் வரை படுக்கை வசதியுடன் கூடிய 12 ஸ்லீப்பர் பெட்டிகள் இருந்தன. ஆனால், தற்போது ஏழாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிக்கான டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
முன்பதிவு செய்தும் படுக்கை உறுதி செய்யப்படாத பயணியர், பல பெட்டிகளிலும் கழிப்பறை அருகே நின்றபடி பயணம் செய்கின்றனர். இதற்கு பதிலாக, 'ஏசி' பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் ரயில் அடுத்த சில மணி நேரத்தில் பெங்களூருக்கு அனுப்பப்படுகிறது.
அது போல பெங்களூரில்இருந்து மாலை 4:00 மணிக்கு வரும் ரயிலை, அடுத்து சென்னைக்கு கன்னியாகுமரி விரைவு ரயிலாக அனுப்புகின்றனர். இதனால், ரயில் பெட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை. பயணியர் மூக்கை பிடித்துக் கொண்டு தான் கழிப்பறைக்கு செல்ல வேண்டி உள்ளது.
பெங்களூருக்கு தொடர் ரயிலாக அனுப்பப்பட்ட பின் தான் இந்த நிலைமை உள்ளதாக ரயில் பயணியர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கன்னியாகுமரி ரயிலை முன் போல இயக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், ரயில் பயணியர் சங்கமும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த ரயிலில் 'ஏசி' பெட்டியில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 'ஓய்வில்லாமல் ரயில் ஓடுவதால் பராமரிப்பு பணிகள் சரிவரச் செய்ய நேரம் இல்லாதது தான் இந்த நிலைமைக்கு காரணம்' என, ரயில் பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.

