/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் விடை தெரியாமல் கிடக்கும் மர்மங்கள் அறநிலையத்துறை கமிஷனர் கள ஆய்வு அவசியம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் விடை தெரியாமல் கிடக்கும் மர்மங்கள் அறநிலையத்துறை கமிஷனர் கள ஆய்வு அவசியம்
ஏகாம்பரநாதர் கோவிலில் விடை தெரியாமல் கிடக்கும் மர்மங்கள் அறநிலையத்துறை கமிஷனர் கள ஆய்வு அவசியம்
ஏகாம்பரநாதர் கோவிலில் விடை தெரியாமல் கிடக்கும் மர்மங்கள் அறநிலையத்துறை கமிஷனர் கள ஆய்வு அவசியம்
ADDED : ஜூலை 06, 2025 01:30 AM

காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவிலில் நிர்வாகம் மீது பக்தர்கள் புகார் அளிப்பதும், பக்தர்கள் நிர்வாகம் மீது புகார் அளிப்பதும் தொடர் கதையாகி வரும் நிலையில், கோவிலில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கு இன்று வரை விடை தெரியாமல் உள்ளதால், துறை கமிஷனர் ஆய்வு நடத்த வேண்டிய தேவை உள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 30 கோடி ரூபாய்க்கு மேலாக செலவிட்டு, ராஜகோபுரம், உட்பிரகாரம், குளம், தரை, இரட்டை திருமாளிகை என அனைத்து இடங்களிலும் திருப்பணி நடக்கிறது.
கோவில்களில், நடக்கும் திருப்பணியில், குளறுபடிகள் நடப்பதாகவும், வழிபாடு நடத்துவதில் சரியான விதிமுறைகள் கடைபிடிப்பதில்லை எனவும், நிர்வாக ரீதியில் கோவிலில் குழப்பங்கள் நிலவுவதாக, கலெக்டர், அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் தரப்பில் இருந்து ஏகப்பட்ட புகார்கள் சென்றபடி உள்ளன.
புகார் தெரிவிக்கும் நபர்கள் மீது கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளிப்பதும் நடக்கின்றன. இவ்வாறான சூழலில், கோவில் கடந்த ஆண்டுகளில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கு இன்று வரை விடை தெரியாத நிலையே நீடிக்கிறது.
கோவில் சிலைகள், உண்டியல் விவகாரங்கள், சிலை மாயமான சம்பவம் என, பல விவகாரங்களுக்கு இன்று வரை பதில் கிடைக்காமல் உள்ளது.
கடந்த 1993ல், உற்சவர் சிலையில் இருந்த ஸ்கந்தர் சிலை திடீரென மாயமானது. காணாமல் போன ஸ்கந்தர் சிலை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சிலை, வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ல் கோவிலில் பயன்பாட்டில் உள்ள தொன்மையான உற்சவர் சிலைக்கு பதிலாக, புதிய உற்சவர் சிலை செய்ததில், கிலோ கணக்கில் தங்க மோசடி நடந்ததாக பதியப்பட்ட வழக்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும், நீதிமன்ற விசாரணை துவங்காமல் உள்ளது.
கோவிலின் வெள்ளி பல்லக்கு, நந்தி வாகனத்தில் வேயப்பட்ட வெள்ளி தகடுகள், கிலோ கணக்கில் மாயமாகியுள்ளன. அவை தொடர்பாகவும் இதுவரை விடை தெரியவில்லை.
கோவிலில் நகை வைக்கும் அறையில் இருந்து, 16 உலோக சிலைகள் எந்த ஆவணங்களும் இன்றி கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் எப்படி கோவிலுக்குள் வந்தது என்று இன்று வரை தெரியவில்லை.
ஐந்து நாட்களுக்கு முன், கோவில் உண்டியலில் தீக்குச்சியை போட்டு, பணத்தை எரிக்க மர்ம நபர் ஒருவர் முயன்றுள்ளார். அந்த நபர் பற்றி இன்று வரை தெரியவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பல பழுதாகி கிடப்பதாக போலீசார் புலம்புகின்றனர்.
இரு ஆண்டுகளுக்கு முன், கோவில் உண்டியலில் மழைநீர் புகுந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் முழுதும் நாசமானது. பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்பது கோவில் நிர்வாகம் வெளியிடவே இல்லை.
இதுமட்டுமல்லாமல், பக்தர்களிடம் விதிமீறி கோவில் ஊழியர்கள் பணம் வசூலிப்பது, கோவிலை பராமரிப்பதில் சுணக்கம் என, நிர்வாகம் மீது பல்வேறு புகார்கள் செல்வதால், அவற்றை சரிசெய்ய அறநிலையத் துறை கமிஷனர் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.

