/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒழுகரையில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பால் பொதுக்குளம் அமைப்பதில் சிக்கல்
/
ஒழுகரையில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பால் பொதுக்குளம் அமைப்பதில் சிக்கல்
ஒழுகரையில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பால் பொதுக்குளம் அமைப்பதில் சிக்கல்
ஒழுகரையில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பால் பொதுக்குளம் அமைப்பதில் சிக்கல்
ADDED : நவ 20, 2024 10:50 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒழுகரை ஊராட்சியில், விவசாய நிலங்களுக்கு மத்தியில், 7 ஏக்கர் பரப்பில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 5 ஏக்கர் நிலப் பரப்பை அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, அந்நிலத்தில் மஹாத்மா காந்தி தேசிய ஊரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு மற்றும் குளம் அமைக்க ஊராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு, நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அந்நபர் எதிர்ப்பு தெரிவித்து வருவதையடுத்து, குளம் அமைத்தல் பணி மற்றும் நுாறு நாள் பணியும் தற்சமயம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி கூறியதாவது:
பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், ஊராட்சிகளில் மரக் கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்திற்காக, ஒழுகரை ஊராட்சியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை பயன்படுத்த தீர்மானித்தோம்.
இதன் முதற்கட்டமாக நீர் ஆதாரம் ஏற்படுத்தும் பொருட்டு, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வாயிலாக குளம் வெட்டும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர், அந்நிலம் தன் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி குளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, குளம் அமைத்தல் பணியோடு, நுாறு நாள் வேலையும் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலங்களை மீட்டு தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

