/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவ - மாணவியரிடம் கேடயங்கள் ஒப்படைப்பு
/
மாணவ - மாணவியரிடம் கேடயங்கள் ஒப்படைப்பு
ADDED : பிப் 19, 2024 06:26 AM
சென்னை,: பெரும்பாக்கம் கல்லுாரி சாலையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 650 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் கடந்த வாரம், ஆண்டு விழா நடந்தது. இதற்கு, அரசு சிறப்பு நிதி வழங்கிய நிலையில், வருகைப்பதிவில் முதலிடம் மற்றும் சிறந்த மதிப்பெண் பெற்ற, 18 மாணவ - மாணவியருக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், பழைய சான்றிதழில், திருத்தி எழுதி வழங்கியுள்ளனர். மேலும், புகைப்படம் எடுத்த பின், மாணவ - மாணவியருக்கு கொடுத்த கேடயங்களை, தலைமையாசிரியர் திரும்ப பெற்றுக்கொண்டார்.
கெஞ்சி கேட்டும் தலைமையாசிரியர் கண்டுகொள்ளாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து, பள்ளி மேலாண்மை குழுவினர் விசாரித்த போது, இந்த கேடயங்களை அடுத்து வரும் அரசு விழாக்களில் மாணவர்களுக்கு பரிசளித்து, 'போட்டோ'வுக்கு 'போஸ்' கொடுத்ததும், திருப்பி வாங்கவும் முடிவு செய்துள்ளது தெரிந்தது.
நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில், அப்பள்ளி தலைமையாசிரியர் அறையில், கேடயங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
உடனே, சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியரை அழைத்து, அவர்களிடம் வழங்க உத்தரவிட்டனர். உதவி தலைமையாசிரியர் கேடயங்களை மாணவ - மாணவியரிடம் வழங்கினார்.
இனிமேல் இதுபோன்று செயல்பட்டால், துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைமையாசிரியரை அதிகாரிகள் கண்டித்தனர்.

