/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு... தடை! விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
/
ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு... தடை! விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு... தடை! விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு... தடை! விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
ADDED : ஏப் 16, 2024 06:59 AM

காஞ்சிபுரம் : தேர்தலுக்கு முன்பாக மூன்று நாட்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் நேற்று அறிவுறுத்தினார். ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெற்ற வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், தேர்தல் பார்வையாளர் பூபேந்திரசவுத்ரி முன்னிலையில், வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், தேர்தலுக்கு முன்னதாக, 72 மணி, 48 மணி, 24 மணி நேரத்திற்கு முன்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், பறக்கும் படை, கண்காணிப்பு குழு என, 84 குழுக்கள் 24 மணி நேரமும், வாகன சோதனை மற்றும் பண பட்டுவாடாவை கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், எஸ்.பி., சண்முகம் தலைமையில், தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் பலவும், முன்கூட்டியே எடுத்துள்ளனர்.
இருப்பினும், தேர்தலுக்கு முன்பாக மூன்று நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி அரசியல் கட்சியினரிடையே, கலெக்டர் கலைச்செல்வி தெளிவாக கூறியுள்ளார்.
72 மணி நேரம்...
அதன்படி, 72 மணி நேரத்திற்கு முன்பாக, வேட்பாளருக்கு ஒரு வாகனமும், முதன்மை முகவர் ஒரு வாகனமும், வேட்பாளரின் பணியாளர் ஒரு வாகனம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ஓட்டுப்பதிவு முடியும் வரை இனம், மதம், மொழி சார்ந்த துாண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது. கோவில்கள், மசூதி, தேவாலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. தனிநபரை பாதிக்கும், இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது. மொத்தமாக, பல்க் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதோ, வாய்ஸ் மெசேஜ் அனுப்பவோ கூடாது.
48 மணி நேரம்...
அனைத்து வேட்பாளர்களும், 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரசாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.
வெளியூரிலிருந்து பிரசாரத்திற்கு வந்த நபர்கள், தொகுதியில் ஓட்டுரிமை இல்லாதவர்கள், லோக்சபா தொகுதியில் இருக்க அனுமதியில்லை. ஐந்து நபர்கள் ஒன்றாக கூடுவதற்கு அனுமதியில்லை. வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி பற்றிய விபரங்களை 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.
24 மணி நேரம்...
அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின், தேர்தல் நடத்தை குழுவினரிடம் 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெற வேண்டும். உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.
தேர்தல் நாளன்று...
வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஓட்டுனர் உட்பட ஐந்து பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உள்ளது.
அனுமதி பெற்ற வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. ஓட்டுச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே ஓட்டச்சாவடியில் அனுமதிக்கப்படுவர்.
தேர்தலுக்கு முன் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி, வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் பார்வையாளர் பூபேந்திர சவுத்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், போலீஸ் எஸ்.பி., சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

