/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டா இடத்தில் வீடு கட்டுவதில் சிக்கல்; நெமிலி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
/
பட்டா இடத்தில் வீடு கட்டுவதில் சிக்கல்; நெமிலி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
பட்டா இடத்தில் வீடு கட்டுவதில் சிக்கல்; நெமிலி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
பட்டா இடத்தில் வீடு கட்டுவதில் சிக்கல்; நெமிலி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 11, 2024 11:01 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்டா கோரிக்கை, ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, உதவித்தொகை என பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி, 540 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து, 6.56 லட்சம் மதிப்பில், 82 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐந்து பள்ளி குழந்தைகளுக்கும், பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய மகளிருக்கு விருதுகளையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் தாலுகா நெமிலி கிராமத்தினர் அளித்த மனு விபரம்:
எங்கள் கிராமத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு இரு மாதங்களுக்கு முன்பாக, வருவாய் துறை பட்டா வழங்கியது. அந்த இடத்தில் வீடு கட்ட நாங்கள் ஏற்பாடு செய்தோம். ஆனால், அங்கு வீடு கட்ட கூடாது என சிலர் பிரச்னை செய்கின்றனர்.
வீடு இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, பட்டா வழங்கிய போதும், உரிய இடத்தில் வீடு கட்ட முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, பட்டா வழங்கிய இடத்தில் பிரச்னை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் அளித்த மனு:
வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட மடவிளாகம் கிராமத்தில், 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு சாகுபடியாகும் நெல்லை அருகே உள்ள நெற்களம் புறம்போக்கு நிலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, நெல் விற்பனை மற்றும் நெல் உலர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளோம்.
இந்நிலையில், இந்த நெற்களம் புறம்போக்கு பகுதியில், மடவிளாகம் பகுதி பழங்குடியினர் 14 குடும்பங்களுக்கு மனை பட்டா வழங்கி உள்ளதாகவும், வருவாய்த் துறை சார்பில் அந்த இடத்தில் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால், இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் உலர வைக்க இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, களம் புறம்போக்கு நிலத்தில் பழங்குடியினருக்கு மனைபட்டா வழங்குவதற்கு மாறாக மாற்று இடத்தில் வழங்கி விவசாயம் பேணி காக்க உதவ வேண்டும்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

