/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பேருந்து நிற்காததை கண்டித்து கரசங்காலில் போராட்டம் நடத்த முடிவு
/
அரசு பேருந்து நிற்காததை கண்டித்து கரசங்காலில் போராட்டம் நடத்த முடிவு
அரசு பேருந்து நிற்காததை கண்டித்து கரசங்காலில் போராட்டம் நடத்த முடிவு
அரசு பேருந்து நிற்காததை கண்டித்து கரசங்காலில் போராட்டம் நடத்த முடிவு
ADDED : டிச 20, 2025 05:34 AM
படப்பை: கரசங்காலில் அரசு பேருந்து நின்று செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டும், நிறுத்தாததால் நாளை மறுநாள் மக்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
குன்றத்துார் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சியில் 8,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி மக்கள் பலர் அரசு பேருந்தை நம்பி தாம்பரம் மற்றும் அதன் சுற்றுபுறங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இயக்கப்படும் தடம் எண் 79 அரசு பேருந்து 5 ஆண்டுகள் முன் கரசங்கால் நிறுத்ததில் நின்று பயணியர்களை ஏற்றியும், இறக்கியும் சென்றது. திடீரென 5 ஆண்டுகளாக இந்த பேருந்து கரசங்காலில் நிற்காததால் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து கரசங்கால் மக்கள் கூறியதாவது:
வண்டலுார் — வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், கரசங்கால் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த வழித்தடத்தில் அரசு மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் நின்று செல்கின்றன. இந்த பேருந்துகள் இரவு 9:30 மணிக்கு மேல் இயக்கப்படுவதில்லை.
இதனால், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகிறோம். தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து தடம் எண் 79 கரசங்கால் நிறுத்தத்தில் நிற்பதில்லை.
இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தோம்.
இதையடுத்து கரசங்கால் நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல உத்தரவிடப்பட்டது. ஆனால், கரசங்கால் நிறுத்தத்தில் இந்த பேருந்து நிற்காமல் செல்கின்றது.
இதனால், இரவு 9:30 மணிக்கு மேல் வேலை முடித்து தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவர்கள் தடம் எண் 79 அரசு பேருந்தில் கரசங்காலில் இருந்து கூடுதலாக 4 கி.மீ., துாரம் பயணித்து, படப்பையில் இறங்கி மீண்டும் கரசங்கால் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவதிக்குள்ளாகிறோம்.
பேருந்து நிறுத்தாததை கண்டித்து நாளை மறுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

