/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
21 குட்டைகளை கண்காணித்து நீர் நிரப்பும் வனத்துறை முன்னெச்சரிக்கை!
/
21 குட்டைகளை கண்காணித்து நீர் நிரப்பும் வனத்துறை முன்னெச்சரிக்கை!
21 குட்டைகளை கண்காணித்து நீர் நிரப்பும் வனத்துறை முன்னெச்சரிக்கை!
21 குட்டைகளை கண்காணித்து நீர் நிரப்பும் வனத்துறை முன்னெச்சரிக்கை!
ADDED : ஏப் 15, 2024 03:33 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கோடையில் வனவிலங்குகளை காக்க, 21 குட்டைகளில், வனத்துறையினர் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியேறுவதை தடுக்க முடிவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கடுமையான வெப்பம் நிலவுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 100 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்துவதால், குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடுமையான வெயில்
கடுமையான வெயில் காரணமாக, மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, வனத்தில் உள்ள விலங்குகள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றன.
குடிநீருக்காக, வனத்தை விட்டு வெளியேறி, சாலையில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன. இதனால், வனத்திற்குள் குடிநீர் வழங்க பல்வேறு இடங்களில் வனத்துறையினர் குட்டைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 36.8 சதுர கி.மீ., பரப்பளவும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 162 சதுர கி.மீ., பரப்பளவும் வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதிக்குள் மான்கள், மயில், முயல், பன்றி, பாம்பு, குரங்கு என, பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. 1,000க்கும் மேற்பட்ட பறவைகளும் கூடுகட்டி வாழ்கின்றன.
இதற்கு தேவையான குடிநீர் வினியோகத்தை டேங்கர் வாகனம் மூலமாகவும், போர்வெல் மூலமாகவும் வழங்குகின்றனர். போர்வெல் அமைத்து, அதற்கு தேவையான மின் சப்ளையை சோலார் வாயிலாக சில இடங்களிலும், மின் இணைப்பு வாயிலாக சில இடங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் ரோந்து
வன விலங்குகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் நடவடிக்கை மார்ச் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் வரை இது தொடரும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குட்டைகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்புவதால், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது:
வனப்பகுதிக்குள் அன்றாடம் வனத்துறை ஊழியர்கள் ரோந்து செல்கின்றனர். குட்டைகளில் தண்ணீர் குறைந்து காணப்பட்டால், உடனடியாக நிரப்பி விடுவோம்.
பருவமழை துவங்கும் செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் நிரப்புவோம். இதனால், வனப்பகுதியை விட்டு, விலங்குகள் வெளியே செல்லாமல் உள்ளேயே வசிக்கும்.
குறிப்பாக, வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மேய்ப்பதாலும், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குற்றம் என்று தெரியாமல், அருகில் வசிக்கும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விலங்குகளை ஓட்டி வருகின்றனர்.
மது பாட்டில்கள்
அவ்வாறு வருவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். அதேபோல், வனத்திற்குள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை போட்டுச் செல்கின்றனர். அதனாலும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, வனப்பகுதிக்குள் தீ வைத்துச் செல்கின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் பலரும் ஈடுபடுவதை தவிர்க்க கேட்டுக் கொள்கிறோம். காப்புக் காட்டிற்குள் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

