/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,932 சாவடிகளில் ஓட்டளிக்க ஏற்பாடு தயார்17.48 லட்சம் பேர்!:372 பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு
/
1,932 சாவடிகளில் ஓட்டளிக்க ஏற்பாடு தயார்17.48 லட்சம் பேர்!:372 பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு
1,932 சாவடிகளில் ஓட்டளிக்க ஏற்பாடு தயார்17.48 லட்சம் பேர்!:372 பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு
1,932 சாவடிகளில் ஓட்டளிக்க ஏற்பாடு தயார்17.48 லட்சம் பேர்!:372 பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு
ADDED : ஏப் 18, 2024 10:38 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதியில், 17.48 லட்சம் வாக்காளர்கள் கொண்ட, 1,932 ஓட்டுச்சாவடிகளில், இன்று தேர்தல் நடைபெறுகிறது. மகளிர் ஓட்டுச்சாவடி, மாடல் ஓட்டுச்சாவடி, 'யூத் பூத்' போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில், 6,800 அரசு ஊழியர்களும், 670 போலீசாரும், 350 மத்திய பாதுகாப்பு படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 372 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, தேர்தல் அமைதியாக நடைபெற கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
காங்சிபுரம் லோக்சபா தனி தொகுதி, திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய, 6 சட்டசபையை உள்ளடக்கியது. இன்று தேர்தல் நடைபெறுவதால், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.பி., செல்வம், அ.தி.மு.க., சார்பில் ராஜசேகர், பா.ம.க., சார்பில் ஜோதி, நாம் தமிழர் சார்பில் சந்தோஷ்குமார் மற்றும் சுயேட்சைகள் என, 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
58 வழக்குகள்
தொகுதி முழுதும், 1,932 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 372 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. இந்த ஓட்டுச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மொத்த ஓட்டுச்சாவடிகளில், 65 சதவீத இடங்களில், வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவ்வாறு, 1,107 கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளன. மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், நுண் பார்வையாளர்களும் பணியாற்ற உள்ளனர்.
கடந்த மார்ச் 16ல் நடத்தை விதிமுறைகள் அமலான நாள் முதல், கண்காணிப்பு குழு, பறக்கும் படை என, 84 குழுவினர், 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் முன்னேற்பாடுகளை, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
வேட்புமனு தாக்கல் துவங்கி, பரிசீலனை முடித்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரை பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரசார பணிகள் தீவிரமடைந்தன.
விதிமீறல் நடவடிக்கைகளை கண்காணித்து, இதுவரை 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாவட்டம் முழுதும், 6,800 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். அரசு ஊழியர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வழங்கப்பட்டு, பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
105 வகை பொருட்கள்
தேர்தல் பணி காரணமாக, 2,000த்துக்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டு செலுத்தி உள்ளனர்.
இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் நேற்று மாலையே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நியமிக்கப்பட்ட, 127 மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் மின்னணு ஓட்டு இயந்திரங்களை, சரக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர்.
உடன், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பேனா, பென்சில், அரக்கு, மை, மெழுகு உள்ளிட்ட, 105 வகை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
மண்டல அலுவலர், சரக்கு வாகனத்திற்கு பின்னால், காரில் செல்வர். உடன் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், போலீசார் உடன் செல்வர். இதற்காக, 127 சரக்கு வாகனங்கள், 127 கார் என, 254 வாகனங்கள் ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டன.
இன்று தேர்தல் முடிந்த பின், அதே வாகனங்களில், ஓட்டுச்சாவடியிலிருந்து ஏற்றப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையம் அமைந்துள்ள, பொன்னேரிக்கரை அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்படும்.
போலீஸ் தரப்பில், 32 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரச்னை செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், 69 பேரிடம், எந்த பிரச்னையும் செய்ய மாட்டோம் என எழுதி வாங்கியுள்ளனர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளை, போலீசார் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க, போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கண்ணை கவரும் 'பிங்க்' ஓட்டுச்சாவடிகள் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதியிலும், தலா ஒரு மாடல் ஓட்டுச்சாவடியும், மகளிர் ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 'யூத் பூத்' ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 'யூத் பூத்' என்பது, இளைஞர்களும், முதல் வாக்காளர்களும் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடியாகும்.
ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில் உள்ள திருமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமையும் ஓட்டுச்சாவடி 'யூத் பூத்' ஆக அமைக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும் இளைஞர்களாக இருப்பர்.
மகளிர் ஓட்டுச்சாவடிகள், 'பிங்க்' நிறத்தில், கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், வீல் சேர் வைக்கப்பட்டுள்ளது. வீல் சேரை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி வாக்காளரை அழைத்து சென்று வர, தலா ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின் இணைப்பு சரிபார்ப்பு
ஓட்டுச்சாவடியில், மின்சார பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே மின்சார விளக்கு, மின் விசிறி போன்றவை நேற்று சரிபார்க்கப்பட்டன.
வெயில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பந்தல், நாற்காலி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடியிலிருந்து, 100 மீட்டர், 200 மீட்டர் துாரத்தை குறிக்கும் கோடுகள், சாலையின குறுக்கே வரையப்பட்டன.
மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால், அவசரஅழைப்புக்காக மின்வாரிய அதிகாரிகளின் மொபைல் எண்களை, ஓட்டுச்சாவடியில் ஒட்டியுள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்திற்கும், மின்வாரிய ஊழியர் ஒருவரும் இன்று பணியில் இருப்பார். மின் கம்பத்தில் இணைக்கப்பட்ட சர்வீஸ் ஒயர்களை, முன்கூட்டியே இணைப்பை சரிபார்த்தனர்.

