/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
/
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஏப் 01, 2024 02:07 AM
சென்னை:சரக்கு வாகனத்தில் 42 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், சென்னையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கு தலா, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்தின் போது, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில், கடந்த 2020 ஜூலை 13ம் தேதி, வாகனங்களில் வரும் நபர்களிடம் 'இ---பாஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என, செங்குன்றம் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த 'அசோக் லேலண்ட் தோஸ்த்' வாகனத்தை சோதனை செய்தனர்.
அதில், நான்கு மஞ்சள் நிற சாக்கு பைகளில், 42 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது.
அவற்றை பறிமுதல்செய்த போலீசார், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஞானராஜ், 23, கொடுங்கையூரைச் சேர்ந்த புருசோத்தமன், 22, ஆகியோரை கைது செய்து, அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது.
போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,'வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே, அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

