/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோமாஸ்கந்தர் சிலையை மீட்பது எப்போது?
/
சோமாஸ்கந்தர் சிலையை மீட்பது எப்போது?
ADDED : ஆக 12, 2024 04:20 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது.
கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல், அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டுச் சென்றார். அன்றிரவு பூட்டை உடைத்து, 2 அடி உயரமுள்ள பித்தளையால் ஆன சிவன் சிலையும், ஒன்றரை அடி உயரமுள்ள பார்வதி சிலை மற்றும் செம்பு தவளை ஆகியவற்றை திருடி சென்றனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்த குமரேசன், 42, மற்றும் சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, ஆகிய இருவரும் சிலைகளை திருடியது தெரியவந்தது. இருவரிடம் இருந்து, சிவன், பார்வதி சிலைகள் மீட்கப்பட்டது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திருடுபோன உற்சவர் சிலைகளை, கூடுதல் கவனம் செலுத்தி, போலீசார் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1காஞ்சிபுரம் அருகேயுள்ள மாகரல் கிராமத்தில், கவுசலாம்பிகை சமேத திருமலை கோவில் உள்ளது. கடந்த 2015 அக்டோபர் 30ம் தேதி இரவு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கருவறையில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட, 2 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் தாயார் உற்சவ சிலைகள் மாயமாகின. தற்போது வரை இந்த இரு சிலைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை
2 காமாட்சியம்மன் கோவில் அருகே, சன்னிதி தெருவில் ஏலேல சிங்க விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 2015 நவம்பர் 17ம் தேதி, ஐம்பொன்னால் செய்யப்பட்ட உற்சவர் விநாயகர் சிலை மாயமானது. பழமையான இந்த விநாயகர் சிலையும், தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை
3 ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சிவன்கூடல் கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த சிவன் கோவிலில் இருந்து, பல ஆண்டுகளுக்கு முன் சோமாஸ்கந்தர் சிலை மாயமானது.
இச்சிலை, சிங்கப்பூர் 'ஏசியன் சிவிலைசேஷன்' மியூசியத்தில் உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள இந்த சோமாஸ்கந்தர் சிலையும், தற்போது வரை மீட்கப்படவில்லை.
இச்சிலைகளை மீட்க, உள்ளூர் போலீசாரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து, தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, கடத்தப்பட்ட சிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

