/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லஞ்சம் பெற்ற விவகாரம் இளைஞர் வீடியோ பதிவால் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
/
லஞ்சம் பெற்ற விவகாரம் இளைஞர் வீடியோ பதிவால் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் பெற்ற விவகாரம் இளைஞர் வீடியோ பதிவால் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் பெற்ற விவகாரம் இளைஞர் வீடியோ பதிவால் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
UPDATED : மே 22, 2024 10:30 AM
ADDED : மே 22, 2024 05:53 AM
'தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது' என, சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட வீடியோ மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பட்டா பெயர் மாற்றம் செய்ய, அந்நபரிடம் லஞ்சம் வாங்கிய, காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்துார் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சென்னை, போரூர் அருகே, மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 40. இவருக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே பரணிபுத்துாரில் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆன்லைனில் விண்ணபித்திருந்தார்.
இந்நிலையில் அவர், 'பணிகளை முடிக்காமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகள், நேரில் ஆழைத்து லஞ்சம் பெற்றனர்' எனக்கூறி, வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
வீடியோவில், 'நான் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தேன். தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஜாதி, வருவாய் சான்றுக்குகூட 500, 1,000 ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் பெற முடியவில்லை.
'வருவாய் துறையினர் லஞ்சம் இல்லாமல் பணியாற்றுவதில்லை. பட்டா மாற்றம் செய்ய 10,000 ரூபாய் கேட்கின்றனர். சாமானியர்களின் வாழ்க்கை என்னாகுமோ?' என, செல்வராஜ் பேசியிருந்தார்.
இந்த வீடியோ, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர், உரிய விசாரணை மேற்கொண்டனர்.
இதில், செல்வராஜ் கூறிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டு, அவர் மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பான ஆவணம், அவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், பட்டா மாற்றம் லஞ்சம் வாங்கிய, பரணிபுத்துார் கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜை, பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

