/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளால் அவதி
/
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளால் அவதி
ADDED : ஏப் 08, 2024 04:31 AM

திருவள்ளூர் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதோடு விபத்திலும் சிக்கி வருகின்றன.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, இலகு, கனரக, வாகனங்கள் என தினமும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை - மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், குண்டு குழிகள் நிறைந்ததாகவும் இருந்ததால் வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து 2014-ல் இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018- இறுதியில் பணி துவங்கி நடந்து வருகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணி மந்தகதியில் நடந்து வருகிறது.
இதில் திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் வரை ஆறு வழிச்சாலை பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.
இந்த நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம், தண்டலம், பாப்பான்சத்திரம், செட்டிபேடு உட்பட பல பகுதிகளில் நெடுஞ்சாலையில் காவல் துறையினர் தடுப்புகள் வைத்துள்ளனர்.
இந்த தடுப்புகளால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதோடு விபத்துகளிலும் சிக்கி வருகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

