/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
/
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
ADDED : மே 14, 2024 06:42 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், தடம் எண் 82சி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், முக்கிய கிராமங்களில் மட்டுமே நின்று செல்லும்.
இந்நிலையில், நேற்று செங்கல்பட்டில் இருந்து, இந்த பேருந்தில் ஏறிய சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பயணியர், சேந்தமங்கலம் கிராமத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளனர்.ஆனால், பேருந்து நடத்துனர், சேந்தமங்கலம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேருந்தில் வந்த பயணியர், மொபைல் போன் வாயிலாக சேந்தமங்கலம் கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சேந்தமங்கலம் நிறுத்தத்தில், 50க்கும் மேற்பட்டோர் பேருந்தை தடுத்து நிறுத்தினர்.
பேருந்தை ஏன் நிறுத்தாமல் செல்கிறீர் என கூறி கேள்வி எழுப்பி, நடத்துனரிடம் கிராமத்தினர் வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்த பாலுார் போலீசார், கிராம மக்களை சமாதானம் செய்தனர்.
சேந்தமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது:
இந்த தடத்தில், ஒரகடம் -- சிங்கபெருமாள் கோவில் இடையே உள்ள எந்த பேருந்து நிறுத்தத்திலும், அரசு பேருந்துகள் முறையாக நின்று செல்வதில்லை. அரசு பேருந்து டிரைவர்கள், இந்த தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
சேந்தமங்கலம் டிக்கெட் கேட்டு ஏறினால், பின்னால் தனியார் பேருந்து வரும் என கூறி இறக்கி விடுகின்றனர். இது போன்ற காரணங்களால், அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோக்களிலும், முன்பின் தெரியாதோரிடம் லிப்ட் கேட்டும் செல்லும் நிலை ஏற்படுகிறது.
எனவே, இந்த தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும், அரசு பேருந்து நின்று செல்ல, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

