/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நில பிரச்னையில் சி.எம்.டி.ஏ.,வுக்கு 'நோட்டீஸ்' கோயம்பேடு வியாபாரிகள் நடவடிக்கை
/
நில பிரச்னையில் சி.எம்.டி.ஏ.,வுக்கு 'நோட்டீஸ்' கோயம்பேடு வியாபாரிகள் நடவடிக்கை
நில பிரச்னையில் சி.எம்.டி.ஏ.,வுக்கு 'நோட்டீஸ்' கோயம்பேடு வியாபாரிகள் நடவடிக்கை
நில பிரச்னையில் சி.எம்.டி.ஏ.,வுக்கு 'நோட்டீஸ்' கோயம்பேடு வியாபாரிகள் நடவடிக்கை
ADDED : ஏப் 16, 2024 08:02 PM
சென்னை:கோயம்பேடு சந்தை வளாகத்தில் காலி நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., நிர்வாகத்திற்கு வியாபாரிகள் சங்கத்தினர், 'நோட்டீஸ்' அனுப்பியதால் சர்ச்சை எழுந்து உள்ளது.
கோயம்பேடு சந்தை வளாகத்தில், 'என் - 124' என்ற கடை உள்ளது. இதன் முன்பகுதியில் உள்ள நிலத்தை கொரோனா காலத்தில், தற்காலிக அடிப்படையில்வியாபாரிகள் பயன்படுத்தினர்.
இதை தடுக்க, சி.எம்.டி.ஏ., மற்றும் அங்காடி நிர்வாக குழு சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து வியாபாரிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அங்காடி நிர்வாக குழு, சி.எம்.டி.ஏ.,விற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து, அங்காடி வளாகத்தில், 'என் - 124' கடையின் முன்பகுதி நிலத்தை வியாபாரிகள் பயன்படுத்துவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில், இங்குள்ள 37,022 சதுர அடி நிலத்தை தனியாக பிரித்து சுற்றுச்சுவர் அமைக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு, வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதையடுத்து, 37,022 சதுர அடி நிலத்தை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் விதிமுறைகளுக்கு மாறாக பயன்படுத்துவதாகக் கூறி, வியாபாரிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதை கைவிட வலியுறுத்தியும்,விளக்கம் கேட்டும், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், தலைமைச் செயல் அலுவலர், அங்காடி நிர்வாக குழு தலைமைச் செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
வியாபாரிகள் அனுப்பிய இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் நடவடிக்கையை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
பொதுவாக கோயம்பேடு சந்தையில் ஆக்கிரமிப்பு, விதிமீறல் புகார்கள் அடிப்படையில் வியாபாரிகளுக்கு சி.எம்.டி.ஏ., நிர்வாகம், அங்காடி நிர்வாக குழு தான் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம்.
இதற்கு மாறாக, வியாபாரிகள் சி.எம்.டி.ஏ., நிர்வாகத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, சர்ச்சையாகி உள்ளது.

