/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொழுந்துவிட்டு எரிந்த கன்னடபாளையம் குப்பைக்கிடங்கு சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி
/
கொழுந்துவிட்டு எரிந்த கன்னடபாளையம் குப்பைக்கிடங்கு சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி
கொழுந்துவிட்டு எரிந்த கன்னடபாளையம் குப்பைக்கிடங்கு சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி
கொழுந்துவிட்டு எரிந்த கன்னடபாளையம் குப்பைக்கிடங்கு சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி
ADDED : ஏப் 03, 2024 11:51 PM

தாம்பரம், மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது, இங்கு குப்பைக் கழிவுகள் கொட்டத் துவங்கினர். காலப்போக்கில், குப்பைக் கிடங்காகவே மாறியது.
அந்த வகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குப்பை கொட்டப்படுகிறது. இதனால், பல்லாயிரம் டன் கணக்கில் குப்பை குவிந்து மலைபோல காட்சியளிக்கிறது.
இதனால், கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. தோல் நோய் உள்ளிட்ட தொற்று நோயால் அப்பகுதி மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை, ஆஸ்துமா, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாளடைவில், நிலத்தடி நீரும் கெட்டுப் போனது. இதனால், கன்னடபாளையம் பகுதி வாழத்தகுதியற்ற இடமாக மாறத் துவங்கியது. கிடங்கை காலி செய்து, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என, அரசிடம் வேண்டுகோள் வைத்து அப்பகுதிவாசிகள் பல போராட்டங்கள் நடத்தினர்.
பல்லாண்டு போராட்டத்தின் விடிவாக, சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த குப்பை முழுதுமாக அகற்றப்பட்டது. லாரிகளில் எடுத்துச் சென்று, ஆப்பூர் அருகேஉள்ள கொளத்துாரில் கொட்டினர்.
பெரும் பிரச்னையாக விளங்கிய குப்பைக் கிடங்கு காலி செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.
ஆனால், இந்த நிம்மதி வெகுநாள் நீடிக்கவில்லை. மீண்டும், அங்கு குப்பையை கொட்டி, மலைபோல் தேக்கிவிட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை குப்பைக் கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில்தீ மளமளவென பரவி, கிடங்கு முழுதும் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.
இதனால், அப்பகுதியில் புகைமூட்டம் அதிகரித்து, கன்னடபாளையத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள், மூச்சு விடக்கூட முடியாமல் திணறி, வீடுகளில் முடங்கினர். குழந்தைகள், முதியோர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி, உறவினர் வீடுகளில் தஞ்சம் புகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மற்றொரு புறம், புகை மூட்டத்தால், தாம்பரம் - கிஷ்கிந்தா சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்கள் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் தெரியாததாலும், மூச்சுத் திணறலாலும் பாதிக்கப்பட்டனர்.
ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

