/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமான நிலையத்தில் 210 அடி உயரத்தில் அமைகிறது புதிய கட்டுப்பாட்டு கோபுரம்
/
விமான நிலையத்தில் 210 அடி உயரத்தில் அமைகிறது புதிய கட்டுப்பாட்டு கோபுரம்
விமான நிலையத்தில் 210 அடி உயரத்தில் அமைகிறது புதிய கட்டுப்பாட்டு கோபுரம்
விமான நிலையத்தில் 210 அடி உயரத்தில் அமைகிறது புதிய கட்டுப்பாட்டு கோபுரம்
ADDED : ஏப் 18, 2024 10:42 PM

சென்னை:சென்னை விமான நிலையத்தில், 210 அடி உயரத்துக்கு புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கான கோபுரம் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக பரபரப்புடன் செயல்படும் விமான நிலையங்களில் ஒன்றாக, சென்னை விமான நிலையம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விமான போக்குவரத்து சேவைகளும், பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
தென் மாநிலங்களில் சென்னை விமான நிலையம் மிக முக்கியத்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பால், விரிவாக்க பணிகள் தவிர்க்க முடியாததாக உள்ளது.
இங்கு விமான நிலைய அடிப்படை கட்டமைப்பு பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிர்வகித்து வருகிறது. அதே நேரத்தில் விமான போக்குவரத்து தொடர்பான பணிகளை, சிவில் விமான போக்குவரத்து பிரிவு கட்டுப்படுத்துகிறது.
ஒவ்வொரு விமான நிலையத்திலும், விமானங்கள் தரையிறங்கவும், புறப்பாடுக்கும் உரிய சிக்னல்களை கொடுப்பது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் பிரதான பணி.
சென்னைக்கு வரும் விமானங்களில் எது, எப்போது, எந்த ஓடுபாதையில் தரையிறங்க வேண்டும் என்பது இந்த கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழிகாட்டப்படும்.
சென்னை விமான நிலையத்தில், 52 அடி உயரத்துக்கு தற்போது கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளது, இதன் வாயிலாக, 26,000 முதல் 46,000 அடி உயரம் வரையில் பறக்கும் விமானங்களுக்கு வழிகாட்ட முடியும். விமானங்களுக்கான வழிகாட்டுதல் பணிகளை நவீன முறைக்கு மாற்ற, ரேடார்கள் மற்றும் தானியங்கி கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதிய கோபுரம்
இந்நிலையில், இங்கு அடிப்படை கட்டமைப்புகள் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, புதிய கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 210 அடி உயரம், அதாவது 23 மாடி கட்டடத்துக்கு இணையான உயரத்தில், புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. அதிக உயரம் என்பதால், இதற்கான பணிகளுக்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன்படி, புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுர பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணிகளை விமான நிலையங்கள் ஆணையம் துவக்கி உள்ளது.
இது தொடர்பான கோப்புகள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

