/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
/
மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : அக் 27, 2024 11:19 PM
கள்ளக்குறிச்சி கல்வியில் பின்தங்கிய மாவட்டம். அதிலும் முழுவதுமாக விவசாயத்தையே நம்பி இருப்பதால் கல்வி என்பது இப்பகுதி பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. காரணம் விவசாயம் போதிய வருமானத்தை கொடுக்காத நிலையில், செங்கல் சூளை, கட்டுமானப்பணி, கரும்பு வெட்டும் கூலி வேலை என பெற்றோர்கள் இடம் பெயர்ந்து பிழைப்பு நடத்துகின்றனர்.
இதனால் பிள்ளைகளை வீட்டில் இருக்கும் முதியவர்களின் பாதுகாப்பில் விட்டு வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாததால் பிள்ளைகளும் பள்ளிக்கு செல்லாமல் கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது.
கல்வியறிவு இன்மை காரணமாக பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து அழிப்பது, குழந்தை திருமணத்தை அரங்கேற்றும் அவலம் வெளி உலகுக்கு தெரியாத நிதர்சன உண்மையாக இருந்து வருகிறது.
இச்சூழலில் பெண் விகிதாச்சாரம் குறைவு காரணமாக ஆண்களுக்கு 30 வயதை கடந்தும் பெண் கிடைக்காததால் மணமகன் வீட்டார் வரதட்சணை இன்றி, பெண் கொடுத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வறுமை நிலையில் வெளியூரில் வேலை செய்யும் பெற்றோர்கள், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து விடுகின்றனர்.
இதன்காரணமாக 14 முதல் 16 வயது நிரம்பிய ஏராளமான பெண்கள் வெளி உலகிற்கு தெரியாமல் சத்தமின்றி திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு பல கிராமங்களில் அரங்கேறி வருகிறது.
அவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டு கர்ப்பமடையும் சிறுமிகள், பாதுகாப்பான பிரசவத்திற்கு மருத்துவமனையை நாடும் பொழுது, சமீப நாட்களாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் மூலம் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்களும், இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இது சம்பிரதாய நடவடிக்கையாகவே அமைகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் காவல் நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமே, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது.
ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், மகளிர் சுய உதவிக் குழு, சமூக ஆர்வலர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.
மேலும், மாணவிகள் பள்ளி இடைநிறுத்தத்தை முழுமையாக கண்காணித்து, அவர்களின் பிரச்னைகளை அன்போடும், அரவணைப்போடும் ஆசிரியர்கள் அணுகி நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பை அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இதனை மேற்பார்வை செய்ய வேண்டியது சமூக நலத்துறையின் அவசர அவசியமாகியுள்ளது.

