/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பாதிப்பு: முக்கிய பணிகளை செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
/
நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பாதிப்பு: முக்கிய பணிகளை செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பாதிப்பு: முக்கிய பணிகளை செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பாதிப்பு: முக்கிய பணிகளை செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 03, 2024 11:07 PM
கள்ளக்குறிச்சி: தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்வதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். மாவட்டத்தில், அத்தியூர் மற்றும் செட்டிதாங்கலில் செவ்வாய்கிழமையும், உளுந்துார்பேட்டையில் புதன்கிழமையும், தியாகதுருகத்தில் சனிக்கிழமை வாரச்சந்தையும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு உதவியாக உள்ளது.
இதில், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை விற்பனையும், காய்கறி விற்பனையும் நடைபெறுவதால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைகின்றனர். சாதாரண நாட்களில் பல லட்ச ரூபாய் மதிப்பிலும், பண்டிகை காலங்களில் கோடி கணக்கிலும் வர்த்தகம் நடைபெறும் முக்கிய சந்தைகளாக உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் அதை பறிமுதல் செய்கின்றனர்.
அதிகளவு பணத்தை எடுத்து சென்றால் அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை விற்பனை முற்றிலுமாக குறைந்துள்ளது. மேலும், திருமணம், காதுகுத்து, வளைகாப்பு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்க பணம் எடுத்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதுதவிர கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் சிமெண்ட், கம்பி, எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்க பணத்தை எடுத்து செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகம் மேற்கொள்வதில்லை.
அதிகாரிகள் சுழற்சி அடிப்படையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல் பிரமுகர்கள் விநியோகிக்கும் பணம், சாப்பாடு, டி-ஷர்ட் ஆகியவை எவ்வித தடங்கலுமின்றி கொண்டு செல்லப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. மாவட்டத்தில், இதுவரை விவசாயிகள் மற்றும் சாதாரண மக்கள் எடுத்து செல்லும் பணம் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிமுறையால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

