/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி... கிடப்பில்:அரசு நிதி ஒதுக்கியும் துவங்காத அவலம்
/
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி... கிடப்பில்:அரசு நிதி ஒதுக்கியும் துவங்காத அவலம்
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி... கிடப்பில்:அரசு நிதி ஒதுக்கியும் துவங்காத அவலம்
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி... கிடப்பில்:அரசு நிதி ஒதுக்கியும் துவங்காத அவலம்
ADDED : டிச 17, 2025 05:46 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி, பணி ஆணை வழங்கியும் கட்டுமானப் பணியை துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருக்கோவிலுாரில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பஸ் நிலையம் வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை நிறைவேற்றும் வகையில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, தற்பொழுது உள்ள பஸ் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் ஏற்கனவே பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் 22.20 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் பி கிளாஸ் பஸ் நிலையமாக அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு சென்று வரும் வகையில் 3.60 கோடி ரூபாய்க்கு நிலப்பரிவர்த்தனை, நில எடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டெண்டர் விடப்பட்டு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் 11ம் தேதி கட்டுமானத்திற்கான பூமி பூஜை விழா தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி தலைமையில் நடந்தது.
பஸ் நிலையத்திற்கு மேலும் இடம் தேவைப்படுவதால் அரசின் சார்பில் மீண்டும் நில எடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும் நிறைவடைந்து விட்டது.
ஆனால் என்ன காரணத்தினாலோ கட்டுமானப் பணியை துவங்காமல் டெண்டர் எடுத்த நிறுவனம் கிடப்பில் வைத்துள்ளது.
இதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமா? ஆட்சியாளர்களின் பாரபட்சமா? மக்கள் பிரதிநிதிகளின் கண்டுகொள்ளாத போக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருக்கோவிலுார் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியான நிலையில், கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கட்டுமான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
ஆனால், திருக்கோவிலுார் பஸ் நிலைய கட்டு மான பணி இன்னும் துவங்காமல் இருப்பது பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.
பஸ் நிலையத்திற்கான அனைத்து தடைகளும் சரிசெய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணியில் தாமதம் செய்வது யார் என்று கண்டறிந்து, தடையை நிவர்த்தி செய்ய மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அல்லது முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
புதிய பஸ் நிலைய கட்டுமான பணி துவங்கிய பிறகே அங்கிருந்து புறவழிச் சாலையுடன் புதிய பஸ் நிலையத்தை இணைப்பதற்கான செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே புதிய பஸ் நிலையம் அமைந்ததற்கான பலனை பொதுமக்களும், பயணிகளும் அனுபவிக்க முடியும்.
எனவே முதல்வர் கள்ளக்குறிச்சி வருகை தந்து, புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை துவங்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

