/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெப்பக்குளம் சீரமைப்பில் அறநிலையத்துறை... அலட்சியம்; நிலவறை கால்வாய் புனரமைக்க கோரிக்கை
/
தெப்பக்குளம் சீரமைப்பில் அறநிலையத்துறை... அலட்சியம்; நிலவறை கால்வாய் புனரமைக்க கோரிக்கை
தெப்பக்குளம் சீரமைப்பில் அறநிலையத்துறை... அலட்சியம்; நிலவறை கால்வாய் புனரமைக்க கோரிக்கை
தெப்பக்குளம் சீரமைப்பில் அறநிலையத்துறை... அலட்சியம்; நிலவறை கால்வாய் புனரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2025 07:00 AM

திருக்கோவிலுார் நகரில் நீர் மேலாண்மையை பாதுகாக்கும் வகையில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் தீர்த்த குளம், தெப்பக்குளம் ஏற்படுத்தினர். தென்பெண்ணை ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தாலும், வாய்க்கால் மூலம் ஏரிக்கு தண்ணீர் வந்துவிடும். ஏரியிலிருந்து கெங்கை அம்மன் கோவில் அருகே பெரிய மதகு ஒன்று உள்ளது. இந்த மதகை திறந்தால், நிலவறை கால்வாய் மூலம் இரட்டை விநாயகர் கோயில் அருகே உள்ள செவ்வக வடிவ கருங்கல் தொட்டியிலிருந்து தெற்கு வீதி, வடக்கு வீதி, மதுரை வீரன் கோவில் தெரு வழியாக 400 மீட்டர் பயனித்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.
அதேபோல் இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து பிரியும் மற்றொரு கால்வாய் பெருமாள் நாயக்கர் தெரு வழியாக 300 மீட்டர் சென்று தீர்த்த குளத்தில் கலக்கும்.
இந்த கால்வாய்கள் 2 அடி அகலம், 4 அடி உயரம் கொண்டது. செதுக்கப்பட்ட கருங்கற்களால் கீழ்பகுதி, சைடு கற்கள், மேற்பகுதி சுண்ணாம்பு கலவை கட்டுமானத்தால் மிக நேர்த்தியாக வடிவமைத்து முழுக்க மூடப்பட்டுள்ளது.
இதில், 5க்கும் மேற்பட்ட இடங்களில் நீள் செவ்வக வடிவ தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் கருங்கல் பலகையால் மூடப்பட்டிருக்கிறது. கால்வாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கருங்கல் பலகையை அகற்றிவிட்டு, தேங்கி இருக்கும் மண்ணை வெளியேற்றுவதன் மூலம் கால்வாய் அடைப்பு முழுவதுமாக சீரடையும் வகையில் மிக நேர்த்தியாக அமைத்துள்ளனர்.
இதனை முறையாக பராமரிக்காத காரணத்தால் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு குளம் அவ்வப்பொழுது வற்ற துவங்கியது.
இக்கால்வாயை துார்வாரி சீரமைத்து, தெப்பக்குளத்தில் சரிந்து போன நீராழி மண்டபத்தை புனரமைத்து, குளத்தை மேம்படுத்த பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பல ஆண்டு கால மக்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 3 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கியது.
ஏற்கனவே உள்ள நிலவறை கால்வாயை தூர் வாருவதற்கு பதிலாக புதிதாக, மார்க்கெட் வீதி வழியாக குழாய் பதிக்கப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர திட்டம் தயாரிக்கப்பட்டது.
மார்க்கெட் வீதி வரை குழாய் பதிக்கப்பட்ட நிலையில், பம்பிங் முறையில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்ட செயல்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. திட்டம் முழுமை அடைந்தாலும் நோக்கம் நிறைவேறாது என வெளிப்படையாக தெரிய துவங்கியதால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
ஒரிரு மாதத்தில் மழைக்காலம் துவங்க உள்ளது. தற்பொழுது குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் கட்டுவதற்கு கடகால் தோண்டப்பட்டு அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோடிக்கணக்கில் செலவழித்து சாத்தியமில்லாத புதிய வழித்தடத்தை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை இனியாவது கைவிட்டு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பழைய பாதாள கால்வாயை, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அடைப்புகளை கண்டறிந்து, துார்வாரி, எளிய முறையில் சீரமைத்தால் செலவுகளை மிச்சப்படுத்தலாம். குளத்தில் மேற்கொள்ள வேண்டிய எஞ்சிய பணிகளையும் முழுமையாக செய்து முடிக்கலாம்.
புதிய வழித்தடம் மூலம் தண்ணீர் கொண்டு செல்வோம் என்றால் அது தோல்வியை தழுவும், குளமும் சீரடையாது. இந்து சமய அறநிலையத்துறை இனியாவது மாற்று வழி திட்டத்தை கைவிட்டு, நிலவறை கால்வாயை புனரமைத்து, குளத்தை விரைவாக சீரமைக்க தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி நேரில் ஆய்வு செய்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.

