/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரப்பளவு... குறைந்தது; போதிய பருவ மழையின்மையால் பாதிப்பு
/
மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரப்பளவு... குறைந்தது; போதிய பருவ மழையின்மையால் பாதிப்பு
மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரப்பளவு... குறைந்தது; போதிய பருவ மழையின்மையால் பாதிப்பு
மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரப்பளவு... குறைந்தது; போதிய பருவ மழையின்மையால் பாதிப்பு
ADDED : மார் 12, 2024 06:27 AM
கள்ளக்குறிச்சி, : வடகிழக்கு பருவ மழை குறைந்ததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரப்பளவில்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான மாடர்ன் ரைஸ் மில்கள் மற்றும் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம், சின்னசேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கோமுகி, மணிமுக்தா அணைகள் மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம் நெல், கரும்பு உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவ மழையின் மூலம் ஜூன், ஜூலை மாதங்களில் குறுவை நெல் சாகுபடி செய்கின்றனர்.
இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போன நிலையில் குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆண்டு இறுதியில் பெய்யும் வடக்கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் குறைந்தளவே பெய்தது. வடக்கிழக்கு பருவ மழையை நம்பி கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், ரிஷிவந்தியம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவிற்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடக்கிழக்கு பருவ மழையை பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்தது. தற்போது வெயிலின் தாக்கத்தினால் நீர் நிலை பகுதிகளில் வேகமாக தண்ணீர் வற்றி வருகிறது. பெரும்பாலான ஏரிகள் தற்போதே வறண்டு காணப்படுகிறது. கிடைக்கும் நீரை கொண்டு கிணற்று நீர் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்வதற்கான வழிவகை உள்ளது.
பெரும்பாலான நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருவதால், இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி நிலங்களின் 3 ஆயிரம் எக்டேர் பரப்பளவிற்கும் மேல் குறைந்து போனதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பா சாகுபடிக்கு வடக்கிழக்கு பருவ மழையை நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

