/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம்; கட்டுப்படுத்த நகராட்சி, காவல்துறை நடவடிக்கை தேவை
/
அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம்; கட்டுப்படுத்த நகராட்சி, காவல்துறை நடவடிக்கை தேவை
அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம்; கட்டுப்படுத்த நகராட்சி, காவல்துறை நடவடிக்கை தேவை
அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம்; கட்டுப்படுத்த நகராட்சி, காவல்துறை நடவடிக்கை தேவை
ADDED : ஆக 20, 2025 07:22 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் டிஜிட்டர் பேனர்களால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அரசியல் தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இரண்டாம் கட்ட தலைவர்கள் அடிக்கடி வருகை தந்து, கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு வரும் கட்சி தலைவர்களை வரவேற்க, மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்களை மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைக்கின்றனர். நீண்ட துாரத்திற்கு சாலையை டிரில் இயந்திரம் மூலம் பஞ்சர் செய்து, வரிசையாக கட்சிக்கொடிகளை நடுவதுடன், சாலையின் குறுக்கே அலங்கார வளைவு அமைக்கின்றனர்.
இது தவிர கட்சி நிர்வாகிகளின் திருமணங்கள், சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகிறது.
டிஜிட்டல் பேனர் வைப்பவர்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதாவது, பேனர் வைப்பவர்கள் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். சாலையோரத்தில் வைக்க வேண்டுமெனில் துறை சார்ந்த அலுவலர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று, அதை போலீசாரிடம் வழங்க வேண்டும். அங்கு பேனரின் அளவு, எத்தனை நாட்கள் வைக்கப்படும், என்ன நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகிறது, மோதல் ஏற்படும் விதமான வார்த்தைகள் உள்ளதா என்பதை டிஜிட்டல் பேனர் வைப்பவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெற்ற கடிதத்தை வருவாய்த்துறையினரிடம் சமர்ப்பித்து, அனுமதி கிடைத்த பிறகு பேனர் வைக்க வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறைகளில் பின்பற்றாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகளால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
பேனர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோதல் ஏற்படும் வகையிலான வாசகங்களும் இடம்பெறுகிறது. இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தாலும் அகற்றப்படுவதில்லை.
மழை காலத்தில் பலத்த காற்று வீசும் போது, பேனர்கள் திடீரென சாலையில் சாய்வதால், வாகன ஓட்டிகள் பலர் காயமடைகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர். ஆனால் அதிக அளவிலான புகைப்படங்களை கொண்டு பெரிய பேனர்கள் வைப்பது தங்களுக்கான கவுரவம் என கட்சி பிரமுகர்கள் நினைப்பதால் போட்டி, போட்டுக்கொண்டு பேனர்கள் வைக்கின்றனர்.
அனுமதியின்றி பேனர் வைத்தவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் விதி வழிவகை உள்ளது.
மாவட்டம் முழுதும் வைக்கப்படும் சட்டவிரோத பேனர்களை கண்காணிக்க வேண்டிய நகராட்சி, போலீஸ் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, விபத்து ஏற்படும் முன் மாவட்டம் முழுதும் வைத்துள்ள பேனர்களை அகற்றுவதுடன், பேனர் வைப்பதில் அரசின் விதிமுறைகள் பின்பற்றவும், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

