/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துட்டுக்காக யார் கூப்பிட்டாலும் செல்லும் மக்கள் ஓட்டு விழுமா என குழப்பத்தில் அரசியல் கட்சியினர்
/
துட்டுக்காக யார் கூப்பிட்டாலும் செல்லும் மக்கள் ஓட்டு விழுமா என குழப்பத்தில் அரசியல் கட்சியினர்
துட்டுக்காக யார் கூப்பிட்டாலும் செல்லும் மக்கள் ஓட்டு விழுமா என குழப்பத்தில் அரசியல் கட்சியினர்
துட்டுக்காக யார் கூப்பிட்டாலும் செல்லும் மக்கள் ஓட்டு விழுமா என குழப்பத்தில் அரசியல் கட்சியினர்
ADDED : ஏப் 09, 2024 05:55 AM
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., என பிரதான கட்சிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் போட்டிக்கு நடுவே இரு கட்சியினரும் நடத்தும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்த்தாலும் தங்களுக்கு ஓட்டு விழுமான என குழப்பத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் மலையரசனும், அ.தி.மு.க., சார்பில் குமரகுருவும் களம் காண்கின்றனர். மூன்றாவது அணியாக உருவெடுத்து இருக்கும் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ் போட்டியிடுகிறார்.
மூன்று வேட்பாளர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பா.ம.க., வேட்பாளரால் திராவிட கட்சிகளுக்கு இணையாக களத்தை அமைக்க முடியவில்லை. காரணம், பா.ம.க.,வினர் தனது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட்டு வழங்கவில்லையே என்ற ஏக்கத்தை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கின்றனர்.
திராவிட கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், கட்சித் தலைவர்களின் வருகை என கூட்டத்தைக் கூட்டுவதற்கு இரு கட்சியினருமே சளைக்காமல் செலவு செய்கின்றனர்.
தி.மு.க., கூட்டத்திற்குச் செல்லும் பெண்களை மறுநாள் அ.தி.மு.க., கூட்டத்தில் காண முடிகிறது. இதற்கு காரணம், ஒரு கூட்டத்திற்கு 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை பணம், சாப்பாடு என கவனிப்புதான். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற பெரும் விவாதம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்பெல்லாம் கட்சிக் கொள்கை பிடிப்புடன் களமிறங்கும் தொண்டர்களால், கிராமங்களில் பெரும் மோதல்கள் வெடிக்கும். காவல் நிலையத்தில் வழக்குகளின் எண்ணிக்கை பெருகும். குறிப்பிட்ட கட்சிகளின் கூட்டத்திற்கு மட்டுமே செல்வார்கள்.
ஆனால் இன்று நிலைமை வேறு. அரசியலை நன்கு உணர்ந்திருக்கும் மக்கள் அரசியல்வாதிகளுக்கு இணையாக தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக தொகுதியில் அமைதி நிலவுகிறது.
ஆனால் பணத்தை தண்ணீராக செலவு செய்யும் கட்சிகள் ஓட்டு யாருக்கு போடுவார்களோ என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

