/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடை காலத்தில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்திட வேளாண்துறை அறிவிப்பு
/
கோடை காலத்தில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்திட வேளாண்துறை அறிவிப்பு
கோடை காலத்தில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்திட வேளாண்துறை அறிவிப்பு
கோடை காலத்தில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்திட வேளாண்துறை அறிவிப்பு
ADDED : ஏப் 26, 2024 12:04 AM
கள்ளக்குறிச்சி: கோடை காலத்தில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோடை கால பயிர் சாகுபடி பருவத்தில் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருமானத்தை உயர்த்திடவும், மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் என்ற கொள்கையை நடைமுறைபடுத்தும் விதமாகவும், சிறப்பு வேளாண்மை உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி நெல் சாகுபடி செய்யும் பகுதிகளில் மிக சன்ன ரக நெற்பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்திடவும், எள் சாகுபடியை ஊக்குவித்து சாகுபடி பரப்பினை மேலும் அதிகரித்திடவும், பயறு வகை சாகுபடியினை அதிகரித்திடவும், சிறுதானிய பயிர் சாகுபடி விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்திடவும், நிலக்கடலை சாகுபடி பரப்பினை அதிகரித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக சிறுதானியங்கள் 39,000 ஹெக்டரிலும், பயறு வகைகள் 43,000 ஹெக்டரிலும், மணிலா 6,500 ஹெக்டரிலும், எள் 5,500 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடை கால சாகுபடிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சிறுதானியங்கள் 1,750 ஹெக்டரிலும், மணிலா 600 ஹெக்டரிலும், எள் 200 ஹெக்டரிலும் உளுந்து 100 ஹெக்டரிலும் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை அடைய தேவையான விதைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவைகள், நோய் தாக்குதலை தடுக்க தேவையான ட்ரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஷ் ப்ளுரோசன்ஸ் போன்ற உயிர் பூஞ்சான கொல்லிகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைந்த காலத்தில் அறுவடை செய்ய உகந்த குறைந்த நீர்தேவையுள்ள சிறுதானியங்கள், மணிலா, எள் மற்றும் உளுந்து பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

