/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
40 கிராம மக்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தி! லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்
/
40 கிராம மக்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தி! லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்
40 கிராம மக்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தி! லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்
40 கிராம மக்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தி! லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்
ADDED : மார் 27, 2024 07:37 AM
திருக்கோவிலுார் : விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள்ஆளும் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலுார் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். எனினும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொள்ளாமல், திருக்கோவிலுார் மற்றும் சுற்றி இருக்கும் சில கிராமங்கள் கள்ளக்குறிச்சியில் சேர்க்கப்பட்டது. திருக்கோவிலுாருக்கு அருகாமையில் இருக்கும் பல கிராமங்கள் விழுப்புரத்துடன் இணைக்கப்பட்டது.
இதன் காரணமாக திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள 20 கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், எஞ்சிய 85 சதவீத பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளன.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெறும் திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் மாற்றான் தாய் மனப்போக்குடன் செயல்படுத்தப்படுவதாக ஊராட்சி தலைவர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்குமாறு குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
அதேபோல் திருக்கோவிலுாருக்கு அருகில் இருக்கும் மணம்பூண்டி, அரகண்டநல்லுார், கொல்லுார், புத்துார், சுந்தரேசபுரம், மெய்யூர், சித்தலிங்கமடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆர்.டி.ஓ., அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசை சார்ந்திருக்கும் பிரச்னைகளுக்கு 35 கி.மீ., துாரம் பயணித்து விழுப்புரம் செல்ல வேண்டி உள்ளது.
5 கி.மீ., துாரத்தில் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் இருந்தும், விழுப்புரத்திற்கு 35 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டி உள்ளது.
எனவே, திருக்கோவிலுார் மற்றும் அத்தொகுதிக்கு உட்பட்ட 20 கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு உறுதி அளித்த தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பாதிக்கப்பட்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் போட்டி காரணமாக சுயநலத்துடன் செயல்படும் அரசியல்வாதிகள், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருவதால், ஆளும் அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.
இது லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

