/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.சிறுத்தைகள் கட்சியினர் மறியல், முற்றுகை, காத்திருப்பால் பரபரப்பு
/
வி.சிறுத்தைகள் கட்சியினர் மறியல், முற்றுகை, காத்திருப்பால் பரபரப்பு
வி.சிறுத்தைகள் கட்சியினர் மறியல், முற்றுகை, காத்திருப்பால் பரபரப்பு
வி.சிறுத்தைகள் கட்சியினர் மறியல், முற்றுகை, காத்திருப்பால் பரபரப்பு
ADDED : பிப் 15, 2024 10:57 AM
ஈரோடு: ஈரோட்டில், வி.சி. கட்சியினர் நடத்திய சாலை மறியல், எஸ்.பி., அலுவலக முற்றுகை, காத்திருப்பு போராட்டத்தால் போலீசார் திணறினர்.
ஈரோடு, சூரம்பட்டி மேற்கு அம்பேத்கர் நகரில் உள்ள பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவிலை இடித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜன., 22ல் அப்பகுதி மக்கள், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலை இடித்தவர்கள் கைது செய்யப்படுவர் என, போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்து
இருந்தனர்.
இந்நிலையில், நேற்று வி.சி.கட்சியினர் கச்சேரி வீதியில் கொடியேற்று விழா நடத்தினர். பின் அங்கிருந்து பேரணியாக ஈரோடு ப.செ.பார்க் பகுதிக்கு சென்றனர். அங்கு கோவிலை இடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், கோவிலை இடித்தவர்களுக்கு சாதகமாக டவுன் டி.எஸ்.பி., ஆறுமுகம் செயல்படுவதாக கூறி கோஷம் எழுப்பினர். திடீரென, 40க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், மறியலில் ஈடுபட்டவர்கள் அருகில் இருந்த எஸ்.பி., அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனர். அங்கு அவர்கள்
எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும், வி.சி.கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வி.சி. நிர்வாகிகள் சிலரை மட்டும், ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்துக்குள்
பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை, எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து செல்ல மாட்டோம் என வி.சி. கட்சியினர் அங்கேயே காத்திருந்தனர். இறுதியில், ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து வி.சி.கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அனுமதியின்றி மறியல் போராட்டம், எஸ்.பி., அலுவலக முற்றுகையால் போலீசார் திணறினர்.

