/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி அருகே அதிவேக பஸ்சால் பயணி உள்பட இருவர் பலி
/
கோபி அருகே அதிவேக பஸ்சால் பயணி உள்பட இருவர் பலி
ADDED : செப் 24, 2024 02:55 AM
கோபி: கோபி அருகே தனியார் பஸ் மோதியதில், மொபட்டில் பயணித்த முதியவரும், பஸ் படிக்கட்டில் பயணித்த வாலிபரும் பலியாகினர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே எரங்காட்டூரை சேர்ந்தவர் நவீன்குமார், 24; தனியார் நிறுவன ஊழியர். சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வழியாக ஈரோடு செல்லும் தனியார் பஸ்சில் நேற்று காலை, 9:15 மணிக்கு பயணித்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்படிக்கட்டில் நின்றபடி பயணித்தார். கோபி, பழைய வள்ளியாம்பாளையம் பிரிவு அருகே புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 87, டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்றார்.
அதிவேகமாக சென்ற பஸ் மொபட் மீது மோதியது. இதனால் டிரைவர் சேகர், 40, திடீர் பிரேக் போடவே, முன்புற படிக்கட்டில் நின்றிருந்த நவீன்குமார் சாலையில் விழுந்ததில், அவர் தலை மீது பஸ்
பின்சக்கரம் ஏறியது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டனர். பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே இருவரும் இறந்து விட்டனர்.
புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பேரிகார்டு அவசியம்; டி.எஸ்.பி.,விபத்து நடந்த இடத்தில் கோபி டி.எஸ்.பி., சீனிவாசன் ஆய்வு செய்தார். பின் பழைய வள்ளியாம்பாளையம் பிரிவு பகுதியில் பேரிகார்டும், ஆண்டவர் மலை சாலையில், வேகத்தடையும் அமைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக கோபி-சத்தி சாலை, பழைய வள்ளியாம்பாளையம் பிரிவு பகுதி என இரு இடங்களில், போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்தனர்.

