ADDED : ஏப் 23, 2024 04:37 AM
தேர்தல் முடிந்தாலும்
குறைதீர் நாளில் 'வெறிச்'
ஈரோடு: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தது முதல், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், வேளாண் குறைதீர் கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் மனு வழங்க வருவோருக்காக, நுழைவு வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், நேற்று வழக்கம்போல மக்கள் புகார் மனுக்களை வழங்குவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், 30க்கும் குறைவான மக்களே மனுக்களுடன் வந்து, பெட்டியில் போட்டு சென்றனர். அத்துடன் தேர்தல் முடிந்த பின் அடுத்த வேலை நாள் என்பதால், கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
காரை சேதப்படுத்திய யானை
தோட்டத்தில் சிறுத்தை உலாசத்தியமங்கலம்: தாளவாடி வனச்சரகத்தில், இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய பயிர்களை தண்பது, சேதம் செய்வது வழக்கமாக உள்ளது.
தாளவாடி, இக்களூர் கிராமத்தில் பிரபுசாமியின் தோட்டத்துக்குள், நேற்று முன்தினம் இரவு ஒரு யானை புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு சென்ற அப்பகுதி விவசாயிகள், டிராக்டர் மூலம் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
* தாளவாடி, மல்குத்திபுரம், தொட்டி கிராமத்தில் பாக்கியலட்சுமி என்பவரின் தோட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறுத்தை நடமாடியது. அங்கு வைக்கப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
கணவனை பிரிந்த பெண் தற்கொலை
ஈரோடு: ஈரோடு, சோலார், பாலுசாமி நகர் கிரீன் பார்க் அவென்யூவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவரின் மனைவி ஹர்சா, 31; தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஹர்சாவின் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் குன்னுார், ஜெகதளா. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆறு ஆண்டாக, ஈரோட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தபடி வசித்தார்.
ஓட்டு போட கடந்த, 19ல் சொந்த ஊருக்கு சென்றார். ஓட்டளித்து விட்டு, மகனை தாய் வீட்டில் விட்டு அவர் மட்டும் ஈரோடு திரும்பினார். இந்நிலையில், 20ம் தேதி நள்ளிரவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆற்றில் மூழ்கி பலியான
எலக்ட்ரீஷியன் சடலம் மீட்பு
புன்செய்புளியம்பட்டி, ஏப். 23-
புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம் சாலை, தனியார் மண்டப பின்புற வீதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் நந்தகோபால், 27; நண்பர்கள் ஐந்து பேருடன் பவானிசாகர் பூங்காவுக்கு நேற்று முன்தினம் சென்றார். பிறகு முடுக்கன்துறையில் பவானி ஆற்றில் அனைவரும் குளித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற நந்தகோபால் நீரில் மூழ்கி மாயமானார். பவானிசாகர் போலீசார், சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டாவது நாளாக நேற்று தேடும் பணி நடந்தது. மூழ்கிய இடத்தில் இருந்து, அரை கி.மீ., தொலைவில், நந்தகோபாலை சடலமாக மீட்டனர். பலியான நந்தகோபாலுக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளார்.
கிராமத்தங்கல் திட்டத்தில்வேளாண் மாணவியர்
கோபி: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை, இளங்கலை நான்காமாண்டு மாணவியர், ௧௦ பேர், கிராம தங்கல் திட்டத்தில், கோபி அருகே சந்திராபுரத்தில், மஞ்சள் அறுவடை மற்றும் பதப்படுத்துதல் பணி மேற்கொண்டனர். தவிர நாதிபாளையம், பெருந்தலையூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், கடுக்காம்பாளையம் பகுதியில் மரக்கன்று நடுதல், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் தயாரிப்பு, விவசாயிகள் கணக்கெடுப்பு என செயல்விளக்கத்தில் ஈடுபட்டனர்.

