/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் சிவராத்திரி விழா
/
ஈரோடு மாவட்டத்தில் சிவராத்திரி விழா
ADDED : மார் 10, 2024 03:46 AM
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மகுடேஸ்வரருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. குருக்கள் பிரபு, ஐயப்பன், பாபு, மகேஷ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பூஜையில் ஈடுபட்டனர். கோவில் இசைக்கலைஞர்களின் மங்கள இசை, நாதஸ்வரம், தவில் வாத்தியங்களுடன் விழா தொடங்கியது. பால், தயிர், இளநீர், சந்தன தைலம், திருமஞ்சனபொடி, வில்வப்பொடி உள்ளிட்ட 14 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 5:00 மணிக்கு மகுடேஸ்வரர் பள்ளியறைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து திருக்காப்பு சாத்தப்பட்டது. 6:00 மணிக்கு நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவாச்சாரியார்கள் இரவு முழுவதும் கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு இரவு கலை நிகழ்ச்சிகள், வேத பாராயணம், கூட்டிசை வழிபாடு மற்றும் சமய சொற்பொழிவு நடைபெற்றது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், மிளகு சாதம், சுண்டல் மற்றும் சுக்கு காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் யுவராஜ் செய்திருந்தார்.
* கோபி பச்சமலை மரகதீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு சூரிய உதய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. சுவாமிக்கு நிவேதனம் செய்த சுண்டல், கிழங்கு வகைகள் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதேபோல், பவளமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், நான்காம் கால பூஜை கோலாகலமாக நேற்று காலை நடந்தது. இரு கோவில்களிலும், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் திரண்டிருந்து சிவனை வழிபட்டு சென்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், இரவு முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் பரத நாட்டிய நடனங்கள் நடந்தது.
இதேபோல், அம்மாபேட்டை காவிரியாற்றங்கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலிலும், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரண்டு சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

