/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., நிர்வாகி மீது சொத்து அபகரிப்பு புகார்
/
தி.மு.க., நிர்வாகி மீது சொத்து அபகரிப்பு புகார்
ADDED : செப் 11, 2025 02:02 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை, எக்கட்டாம்பாளையம், புதுவலசை சேர்ந்த பானுமதி, அவரது மகள் விவக்சா ஆகியோர் உறவினர்களுடன் வந்து, ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லாவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
நானும், எனது மகளும் புதுவலசில் சொந்த வீட்டில் வசிக்கிறோம். எனது கணவர் கணேசனுக்கு, குடும்ப சொத்து, 5 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால், எங்களை பிரிந்து வாழ்வதுடன், விவகாரத்து கோரி பெருந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு செய்ததில், எனக்கு நான்கு லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை வழங்காததால் அவரது சொத்தில் ஒரு பகுதியை ஜப்தி செய்ய உத்தரவானது.இதற்கிடையில் சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் பிரபு, கணவர் பெயரில் உள்ள குடும்ப சொத்தில், 3.5 ஏக்கர் சொத்தை தனது மகன் பெயரில் கிரய ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் வாங்கிய நிலத்தின் ஒரு பகுதியில், நான் வசிக்கும் வீடு உள்ளது. எனது கணவருடன் சேர்ந்து சிலர் வீட்டை உடைத்து, எங்களை தாக்கினர். எங்களது குடும்ப சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தி.மு.க., ஒன்றிய செயலர் பிரபு கூறியதாவது: என்னிடம் கணேசன், 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். அதற்காகத்தான் நீதிமன்றம் கூறிய ஒரு பங்கை தவிர்த்து, மற்ற பகுதியில் உள்ள நிலத்தை கிரயம் செய்துள்ளேன். எனது பணத்தை கொடுத்தால், நிலத்தை கொடுத்து விடுவேன். இவ்வாறு கூறினார்.