/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவகிரி இரட்டை கொலையில் போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
/
சிவகிரி இரட்டை கொலையில் போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
சிவகிரி இரட்டை கொலையில் போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
சிவகிரி இரட்டை கொலையில் போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
ADDED : மே 08, 2025 01:34 AM
ஈரோடு, சிவகிரி இரட்டை கொலை வழக்கில், வாய்க்கால் பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர்.
சிவகிரி, விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்த ராமசாமி--பாக்கியம் தம்பதியினர் தனியே வசித்தனர். இருவரையும் சில தினங்களுக்கு முன், மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அவர்களிடம் இருந்து, 11 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க, 12 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய தோட்டங்களில் பணியாற்றும் உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பழங்குற்றவாளிகள் விசாரிக்கப்படுகின்றனர். தோட்டத்து வீடுகளில் தனியாக இருப்பவர்களின் விபரங்களை சேகரிக்க ஈரோடு, நீலகிரி, நாமக்கல் மாவட்ட போலீசாரை கொண்டு, 68 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35 பைக், மூன்று நான்கு சக்கர வாகனங்களில், 21 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கியுடன் பகல், இரவு ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், 31 கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, போலீஸ் அதிகாரிகள் மூலம் கிராம மக்களிடம் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது, அவற்றினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்ட எஸ்.பி., சுஜாதா தலைமையில், இரண்டு ஏ.டி.எஸ்.பி,,க்கள், இரு டி.எஸ்.பி.க்கள் என, 200 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், நேற்று காலை முதல் சிவகிரி பகுதியில் கோம்பிங் ஆப்ரேஷனில் ( தேடுதல் வேட்டை) ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வாய்க்கால் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், மர்ம நபர்கள் குறித்து தடயம் ஏதும் கிடைக்கிறதா என, சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
போலீசார் கூறுகையில்,' மொபைல் போன் பயன்பாடு இல்லாமலும், தடயத்தை விட்டு செல்லாமலும் இந்த ஆதாய கொலை நடந்துள்ளது. பல்லடத்தில் நடந்த மூவர் கொலையிலும் இதே பாணி கடைபிடிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
'சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை'
இந்நிலையில், நேற்று அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இச்சம்பவம் குறித்து, மேல் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் விசாரணை அதிகாரியாக உள்ளார். ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள மொபைல்போன் டவர் தரவுகளை சேகரித்து, ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவாக குற்றவாளிகளை கண்டு
பிடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். போலீசார் கண்டுபிடித்ததை வெளியிடுவது, விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் வெளியிடவில்லை.
அரசு கவனக்குறைவாக இருந்தால், சி.பி.ஐ., விசாரணைக்கு போகலாம் என சொல்லலாம். தமிழக போலீஸ் வலுவாக, திறமையாக உள்ளது. கண்டிப்பாக தமிழக போலீஸ் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. விவசாயிகள் மூலம் குழு அமைத்து, சந்தேக நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவரவர் தற்காப்பிற்காக துப்பாக்கியை வைத்துக் கொள்ளலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனைவரும் வைத்துக் கொள்ளலாம் என்பதில் உள்ள பிரச்னைகளை யோசிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

