/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய தொழில் நுட்பத்தில் சீரான குடிநீர் வினியோகம்
/
புதிய தொழில் நுட்பத்தில் சீரான குடிநீர் வினியோகம்
ADDED : பிப் 07, 2024 11:15 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன் குமாரவலசு ஊராட்சியில் செயல்பாட்டில் உள்ள, 'ஐ-நீர்' திட்ட குடிநீர் வினியோகம், ஊராட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
குமராவலசு ஊராட்சி தலைவராக இருப்பவர் இளங்கோ. ஊராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தில் முறையான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார். இதன்படி அவர் 'ஐ-நீர்' முறையை ஏற்படுத்தினார்.
அதாவது இந்த திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றுதல், கீழ்நிலை தொட்டி மற்றும் குழாய்களுக்கு நீர் வினியோகம் ஆகிய பணிகளை இணைய வழியில், மொபைல்போன் மூலம் இணைத்தார்.
இதனால் தொட்டிகளில் நீர் நிரம்பியவுடன், சென்சார் மூலமாக தானாகவே நீரேற்றம் நின்று விடும். குடிநீர் வினியோகத்திலும் அனைத்து குழாய்களும் அடைக்கப்பட்டவுடன் தானியங்கி வால்வுகள் தாமாகவே இயங்கி மூடிக்கொள்ளும். இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டதுடன், மின் செலவும் கட்டுக்குள் வந்தது. மேலும் இந்த முறையில் இயங்கும் அனைத்துக்கும், சோலார் பேனல்கள் மூலம் இயங்குவதால், மின் தடை காலங்களிலும், குடிநீர் வினியோகம் தடைபடாது. இதனால் ஊராட்சிக்கு மாதந்தோறும் மின்சார கட்டணமும், 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மிச்சமாகிறது.
இதையறிந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ஆகியோர், இந்த திட்டத்தின் பயன்களை மற்ற பகுதிகளிலும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள, தர்மபுரி மாவட்டத்தில் பத்து ஒன்றியங்களில் இருந்து, பி.டி.ஓ.,க்கள் உள்பட, 50 பேர் குழுவினர் குமாரவலசுக்கு நேற்று வந்தனர். திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். சேர்மேன் காயத்ரி இளங்கோ, குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ ஆகியோர், திட்ட நடைமுறைகள் குறித்து விளக்கினர். இதை தொடர்ந்து குட்டப்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணையையும் குழுவினர் பார்வையிட்டனர். தற்போது இந்த நடைமுறை, 10 மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அமலில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

