/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.வி.எம்.,களில் வேட்பாளர் விபரம், சின்னம் பொருத்தும் பணி
/
இ.வி.எம்.,களில் வேட்பாளர் விபரம், சின்னம் பொருத்தும் பணி
இ.வி.எம்.,களில் வேட்பாளர் விபரம், சின்னம் பொருத்தும் பணி
இ.வி.எம்.,களில் வேட்பாளர் விபரம், சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 11, 2024 11:32 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் (இ.வி.எம்.,), புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
வரும், 19ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கணினி முறை சுழற்சி ஒதுக்கீடு செய்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இரண்டாம் கணினி முறை சுழற்சி மூலம், எந்தெந்த ஓட்டுச்சாவடியில் எந்த இ.வி.எம்., பயன்படுத்த வேண்டும் என ஒதுக்கீடு செய்துள்ளனர். இதற்காக, 1,688 ஓட்டுச்சாவடிகளுக்கு, 4,056 இ.வி.எம்.,கள், 2,028 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,198 வி.வி.பேட் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இ.வி.எம்.,களில் நேற்று காலை முதல் வேட்பாளர்களின் புகைப்படத்துடன், பெயர் விபரம், சின்னம் கொண்ட ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி துவங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மாநகராட்சியிலும், மேற்கு தொகுதிக்கு தாலுகா அலுவலக வளாகத்திலும், மொடக்குறிச்சிக்கு தாலுகா அலுவலகத்திலும், தாராபுரத்துக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், காங்கேயத்துக்கு முத்து பழனியப்பா வள்ளியம்மை திருமண மண்டபத்திலும், குமாரபாளையத்துக்கு அங்குள்ள தாலுகா அலுவலகத்திலும், இப்பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
* திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கோபி சட்டசபை தொகுதியில், 296 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் தலா, 355 இயந்திரங்களும், வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டு சீட்டை உறுதி செய்ய, 384 இயந்திரங்களும் பெறப்பட்டது.
அவை அனைத்தும், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில் உள்ள தேர்தல் பதிவறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேட்பாளர் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் கொண்ட, 'பேலட் பேப்பர்' பொருத்தும் பணி நேற்று காலை, 7:30 மணிக்கு துவங்கியது. கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பன் தலைமையில், கட்சியினர் முன்னிலையில் சீல் வைத்த அறையை திறந்து, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, தயார் செய்யும் பணி நேற்று துவங்கியது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், 13 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா சின்னம் அச்சடித்த 'பேலட் பேப்பர்' பொருத்தும் பணி துவங்கியது. பேலட் பேப்பர் பொருத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், சோதனை பதிவு நடத்தி அதன் ஓட்டு எண்ணிக்கையை சரி பார்த்தனர். அந்தந்த அரசியல் கட்சிகளின் சார்பில், முதன்மை ஏஜென்டுகள் வந்திருந்தனர். இப்பணிகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

