/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
/
மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : ஜூலை 29, 2025 01:18 AM
ஈரோடு, குப்பை வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததால், ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரான, அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கமுத்து பேசியதாவது: மாநகராட்சியில் குப்பை வரிகளை ரத்து செய்யக்கோரியும் நடவடிக்கை இல்லை. புதிதாக விதிக்கப்பட்ட வரிகளை குறைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள, 1, 2வது தீர்மானங்களை கடந்த இரண்டு கூட்டத்தில் ரத்து செய்ய கூறினோம். ஆனால் மீண்டும் இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு சென்றடையவில்லை. மாநகராட்சியால் கட்டப்பட்ட பூங்காக்ககளில் நிர்வாகம் செய்ய ஆட்கள் நியமிக்காமல் புதர்போல் காட்சியளிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு அவர் பேசி முடித்த பிறகு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஜெகதீஸ், கவுன்சிலர்கள் தங்கவேலு, ஹேமலதா, பாரதி, நிர்மலாதேவி என அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

