/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
/
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம் கோலாகலம்
ADDED : ஏப் 07, 2024 03:52 AM
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் கம்பம் ஊர்வலம், நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதையொட்டி மாநகரின் அனைத்து பகுதி மக்களும், மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடினர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 2ம் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. 3ம் தேதி பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. விழா இறுதி நிகழ்வாக பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு நேற்று நடந்தது. மதியம், 3:௦௦ மணிக்கு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. பின் கம்பத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதிக்கு சென்றனர். அங்கு சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பங்கள் கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து மூன்று கோவில்களின் கம்பங்களும் ஒன்றாக சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஜி.எச்.ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சத்திரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம், மண்டபம் வீதி, கச்சேரிவீதி, ஆர்.கே.வி.ரோடு, அக்ரஹாரம் வீதி வழியாக சென்று காரை வாய்க்காலுக்கு சென்று கம்பங்கள் விடப்பட்டன.
கம்பங்கள் ஊர்வலமாக சென்றபோது, சாலையின் இருபுறமும் நின்று பக்தர்கள் வழிபட்டதோடு, உப்பு, மிளகு, நெல், தானியங்கள் மற்றும் நாணயங்களை கம்பங்கள் மீது வீசி வழிபட்டனர். இவ்வாறு கம்பங்கள் மீது வீசப்பட்டு சாலையில் விழுந்த உப்பு, மிளகு மற்றும் தானியங்களை பலர், பூஜை அறையில் வைத்து வழிபட, சேகரித்து கொண்டு சென்றனர்.
முன்னதாக விழாவையொட்டி, ஈரோடு மாநகரில் காலை முதலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை, ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி உற்சாகமாக கொண்டாடினர். கம்பம் ஊர்வலத்தை ஒட்டி, மாநகரில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு பணியில், 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

