/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகன புகை பரிசோதனை மையத்தில் புதிய செயலி; 6ம் தேதி முதல் அமல்
/
வாகன புகை பரிசோதனை மையத்தில் புதிய செயலி; 6ம் தேதி முதல் அமல்
வாகன புகை பரிசோதனை மையத்தில் புதிய செயலி; 6ம் தேதி முதல் அமல்
வாகன புகை பரிசோதனை மையத்தில் புதிய செயலி; 6ம் தேதி முதல் அமல்
ADDED : மே 04, 2024 01:33 AM
ஈரோடு:வாகன புகை பரிசோதனை மையங்களில் புதிய செயலி மூலமே, வரும், 6 முதல் புகை பரிசோதனை சான்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் செல்வகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாகன புகை அதிகரிப்பால், காற்று மாசுபாடு, நுரையீரல் தொடர்பான பாதிப்பு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த மாநில அளவில், 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் அனுமதி பெற்று இயங்குகின்றன.
சில மையங்களில் வாகனங்களை பரிசோதனை செய்யாமல் சான்று வழங்கப்படுவதாக புகார் வருகிறது. இதன்படி, ஏப்., 13ல் மாநில அளவில் மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், துணை போக்குவரத்து ஆணையர், இணை ஆணையர்கள் தணிக்கை செய்தனர்.
அப்போது, 50 மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபரின்றி, வேறு நபர்கள் பணியில் இருந்ததும், உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியதும், கேமரா பொருத்தப்படாதது, உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது தெரியவந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மையங்களை மேம்படுத்தவும், புகாரை தவிர்க்க தொழில் நுட்பங்கள் உருவாக்கி, 'PUCC 2,0 version' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் தனிப்பட்ட மொபைல் போன் உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த மொபைல் போனில், இந்த 'வெர்சன்' நிறுவி ஜி.பி.எஸ்., வசதியுடன் இயங்கும்.
அந்த செயலி உள்ள மொபைல் போன், வாகன பரிசோதனை மையத்தில் இருந்து, 30 மீட்டருக்குள் மட்டுமே செயல்படும்.
வாகன புகை பரிசோதனையின்போது, இரு புகைப்படம் எடுக்கப்படும். அதில் வாகன பதிவு எண், மைய பெயர் பலகையுடன் முழு தோற்றம், அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் படத்தில் இடம் பெறுவர்.
விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே, புகை பரிசோதனை சான்று பதிவிறக்கம் செய்யவோ, பிரின்ட் எடுக்கவோ இயலும். ஜி.பி.எஸ்., கருவியால், வாகனம் இருக்கும் இடம் கண்டறிவதால், வாகனம் கொண்டு வராமல் புகை பரிசோதனை செய்ய இயலாது.
இம்முறை வரும், 6 முதல் மாநில அளவிலும், ஈரோடு மாவட்டத்திலும் அமலாகிறது. இந்த செயலி மூலம் மட்டுமே வாகன புகை பரிசோதனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மையங்கள் 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

