/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு
/
மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு
ADDED : ஏப் 25, 2024 05:13 AM
நாமக்கல்: மாவட்டத்தில், வெப்பத்தின் தாக்கம் காலை முதல் அதிகம் இருந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அச்சம் காரணமாக, குழந்தைகள், முதியவர்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட, 15 மாவட்டங்களில், வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், வெப்பநிலை அதிகபட்சம், 106 டிகிரி பாரன்ஹீட்டை எட்டி உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, கம்மங்கூழ், இளநீர், நுங்கு, வெள்ளரி போன்றவற்றை அருந்தி வருகின்றனர். மேலும், குளிர் பானங்கள், பழச்சாறு ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். வெயில் கடுமையாக இருப்பதால், சிறுவர் முதல், பெரியவர் வரை அனைவரும் வெளியே தலைகாட்ட முடியாமல், வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். நேற்று மாலை, 3:00 மணிக்கு, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதற்கிடையே, மதியம், 12:00 முதல், மாலை, 3:00 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில், இரண்டு நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதனால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மதியம், 12:00 முதல், மாலை, 3:00 மணி வரை, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

