/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடையில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மந்தம் கோபியில் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம்
/
ஓடையில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மந்தம் கோபியில் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம்
ஓடையில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மந்தம் கோபியில் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம்
ஓடையில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மந்தம் கோபியில் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம்
ADDED : மே 17, 2024 08:32 PM
கோபி:கீரிப்பள்ளம் ஓடையில் கசடு மற்றும் கழிவு சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மந்தமாக நடப்பதால், கோபியில் பலத்த மழை பெய்தால், குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி நகரின் மையப்பகுதியில், கீரிப்பள்ள ஓடை செல்கிறது. கோபி நகராட்சி குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீருக்கு, கீரிப்பள்ளம் ஓடை வடிகாலாக உள்ளது. தினமும் சராசரியாக, 150 கன அடி வரை கழிவுநீர் செல்கிறது. பாரியூர் அருகே பதி என்ற இடத்தில் தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது.
கோபி டவுன் பகுதியில், அவ்வப்போது ஆகாயத்தாமரை மற்றும் சேறு படிமானங்கள் தேங்கி, மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நகராட்சி சார்பில், மத்திய மற்றும் மாநில அரசு நிதியாக, 14 கோடி ரூபாய் மதிப்பில், கசடு மற்றும் கழிவு சுத்திகரிப்பு நிலையம், கட்டமைப்பு பணி கடந்தாண்டில் துவங்கியது. கபிலர் வீதி மற்றும் வீராசாமி வீதிக்கு அருகே கட்டமைப்பு பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. தற்போது கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அடிக்கடி மழை பெய்கிறது. வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால், கீரிப்பள்ள ஓடையின் குறுக்கே, மேற்கொள்ளும் கட்டமைப்பால், மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் கீரிப்பள்ளம் ஓடையில், சரவணா தியேட்டர் சாலை பாலம் வரை, ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இரவில் பலத்த மழை பெய்தால், கபிலர் வீதி, மேட்டுவலவு, வீராசாமி வீதி, ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர், சுப்பண்ணன் வீதி குடியிருப்புகளில் மழை நீர் புகும். எனவே, திட்டப்பணியை விரைந்து முடிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

