ADDED : ஏப் 17, 2024 11:53 AM
ஈரோடு: தேர்தலுக்கு முந்தைய, 72 மணி நேரம் மற்றும், 48 மணி நேரத்துக்குள் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறை குறித்த கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் பேசியதாவது: தேர்தலுக்கு முந்தைய, 48 மணி நேரத்துக்குள் ஒலிபெருக்கிகள் தடை செய்யப்படுகிறது. தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் நடமாட்டம், தங்கும் விடுதிகள், சமுதாய கூடங்களில் தங்குதல், கூட்டம் கூடுதல், அதிகமாக எஸ்.எம்.எஸ்., அனுப்புதல் தடை விதிக்கப்படுகிறது. மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சந்தேகப்படும் இடங்களில் தணிக்கை செய்யப்படும். மேடை நாடகங்கள், கச்சேரி, கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிற மாவட்டத்தினர் தங்க அனுமதி இல்லை.
ஓட்டுப்பதிவு நாளில், ஓட்டுச்சாவடி அமைவிடத்தில் இருந்து, 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் தற்காலிக பூத் அமைக்கலாம். அதற்கும், வேட்பாளர்கள் வாகனங்களுக்கும் அனுமதி பெற வேண்டும். தேர்தல் குறித்த புகாரை, கட்டுப்பாட்டு அறைக்கு, 1800 425 0424, தொலைபேசி எண்: 0424 2267672, 2267675, சி-விஜில் ஆப் மூலமும் தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், அதிகாரிகள் ரகுநாதன், சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

